ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமாக மாறுகிறது காவேரிப்பாக்கம் ஏரி: சாத்தியக்கூறு ஆய்வறிக்கை பிப்ரவரியில் சமர்ப்பிப்பு சென்னையை சேர்ந்த ஆலோசகர் ஆய்வு

சிறப்பு செய்தி

சென்னையை பொறுத்தவரை ஆண்டுதோறும் கோடை காலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். அப்போதெல்லாம் சென்னையின் குடிநீர் ஆதாரமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, வீராணம் போன்ற முக்கிய ஏரிகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் மட்டுமே கைகொடுக்கும். இந்த புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளின் மூலம் மொத்தம் 11,757 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இந்த ஏரிகளுக்கும் பருவமழை காலங்களில் மழை சரியாக பெய்தால் மட்டுமே தண்ணீர் வரத்து கிடைக்கும். சென்னையில் சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் கட்டுப்படுவதாலும், சென்னை பெருநகர் விரிவடைந்து கொண்டே செல்வதாலும் குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இருப்பினும் தற்போது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்வதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கோடைகாலங்களில் இந்த ஏரிகள் வறண்டு விடுவதால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஏரி சென்னையின் குடிநீர் ஆதாரமாக மாற வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகில் உள்ள காவேரிப்பாக்கம் ஏரி, தமிழகத்திலேயே 3வது பெரிய ஏரியாக உள்ளது. 650 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னனான 3ம் நந்திவர்மனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும், தற்போது பிரிக்கப்பட்ட புதிய ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே மிகவும் பெரிய ஏரியாக காவேரிப்பாக்கம் ஏரி உள்ளது. காவேரிப்பாக்கம் ஏரியின் மொத்த பரபரப்பளவு 3968 ஏக்கர். கொள்ளளவு 1,474 மில்லியன் கன அடி. இந்த ஏரியின் உயரம் 30.65 அடி, கரையின் அகலம் 11 அடி (3.5 மீட்டர்), கரையின் நீளம் 8.35 கிலோ மீட்டர். ஏரிக்கரையின் பலத்துக்காக ஏரியின் உள்கரையில் மிகப் பெரிய பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கபட்டுள்ளன.

பாலாற்றில் இருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீர் வரும் வகையில் பிரமாண்டமான கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. இவ்வாறு ஏரிக்கு வரும் தண்ணீர் நரி மதகு, சிங்க மதகு, மூலமதகு, பள்ளமதகு என 10 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு கால்வாய்கள் மூலம் காவேரிப்பாக்கம், கொண்டாபுரம், கட்டனை, சேரி அய்யம்பேட்டை, துரைபெரும்பாக்கம், பாணாவரம் உள்ளிட்ட 14 கிராமங்களுக்கு நேரடியாக தண்ணீர் பெறப்படுகிறது. காவேரிப்பாக்கம் ஏரி மூலம் மகேந்திரவாடி, சித்தேரி உள்பட பல சிறிய, பெரிய ஏரிகள் கால்வாய்கள் மூலம் பெற்று அந்தந்த பகுதியில் பாசனம் மற்றும் குடிநீர் வசதியை பெறுகின்றனர். மேலும், இந்த ஏரியில் இருந்து 14 கிராமங்களின் 6278 ஏக்கர் பரப்பளவு வேளாண் நிலங்கள் நீரை பெறுகின்றன. காவேரிப்பாக்கம் ஏரிக்கும் பாலாறு அணைக்கட்டுக்கும் இடையே உள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் கருங்கற்கள் பதிக்கப்பட்ட கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரக்கப்படுகிறது. இவ்வாறு ஏரி முழுமையாக நிரம்பும்போது ஏரியின் மொத்த கொள்ளளவு உயரம் சுமார் 30.65 அடியாக உள்ளது. இந்த ஏரியின் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றின் நீராதாரமாக உள்ளது.

இந்நிலையில், மதுராந்தகம் போன்ற மற்ற நீர்த்தேக்கங்களை புனரமைக்க என்ன வழிமுறைகளை கையாளப்படுகிறதோ அதேபோன்று காவேரிப்பாக்கம் ஏரியை புனரமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் இறுதி வரைவு மற்றும் விரிவான திட்ட அறிக்கையை சென்னையை சேர்ந்த ஆலோசகரால் அடுத்த மாதம் (பிப்ரவரி) சமர்ப்பிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்நிலையான காவேரிப்பாக்கம் ஏரி நகரின் குடிநீர் ஆதாரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் சென்னைக்கு நீரை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை நீர்வளத்துறை ஆய்வு செய்து வருகிறது. ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மாவட்டத்தில் உள்ள 519 குளங்களின் 1605 ஹெக்டேர் பரப்பளவை விட காவேரிப்பாக்கம் ஏரி பெரியது. அதேபோல் வீராணம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை போன்று காவேரிப்பாக்கம் ஏரி உள்ளது. மதுராந்தகம் போன்ற மற்ற நீர்த்தேக்கங்களை புனரமைக்க கையாளப்படும் வழிமுறைகளை போன்று, காவேரிப்பாக்கம் ஏரியை புனரமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் இறுதி வரைவு மற்றும் விரிவான திட்ட அறிக்கையை சென்னையை சேர்ந்த ஆலோசகரால் அடுத்த மாதம் (பிப்ரவரி) சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏரியின் சேமிப்புத் திறன் 1474 மில்லியன் கனஅடி. ஆனால், பல ஆண்டுகளாக சேகரமாகியுள்ள வண்டல் மண் காரணமாக 947 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் ஏரியின் உயரத்தை இரண்டடி உயர்த்தவும், 1000 மல்லியன் கனஅடியாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏரியிலிருந்து கொசஸ்தலையாறு மற்றும் கூவம் ஆறு வழியாக தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

காவேரிப்பாக்கத்திலிருந்து வரும் தண்ணீர் கேசவரம் அணைக்கட்டுக்கு வந்து, அங்கிருந்து கூவம் ஆற்றுக்கு செல்கிறது. சுமார் 400 முதல் 500 மில்லியன் கனஅடி உபரி நீர் பூண்டி நீர்த்தேக்கத்திற்கும், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கும் அனுப்பப்படலாம். இதன் மூலம் ஆயக்கட்டு பகுதியில் 2541 ஹெக்டேர், சிறுகரும்பூர், பனையூர் உள்ளிட்ட சுமார் 37 கிராமங்களில் விவசாயத்திற்கு முக்கிய நீர்ஆதாரமாக விளங்கும். நிலத்தடி நீர்மட்டமும் உயரக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

* தமிழகத்திலேயே 3வது பெரிய ஏரியாக காவேரிப்பாக்கம் ஏரி உள்ளது.

* 1000 மில்லியன் கனஅடி நீரை சேகரிக்க திட்டம்.

* காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் நீரை கொசஸ்தலை, கூவம் ஆறு வழியாக சென்னைக்கு அனுப்ப திட்டம்.

* பூண்டி நீர்த்தேக்கத்திற்கும், செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்திற்கும் சுமார் 400 முதல் 500 மில்லியன் கனஅடி உபரிநீர் கூடுதலாக கிடைக்கும.

* திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 37 கிராமங்களில் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் அதிகரிக்கும்.

 

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமாக மாறுகிறது காவேரிப்பாக்கம் ஏரி: சாத்தியக்கூறு ஆய்வறிக்கை பிப்ரவரியில் சமர்ப்பிப்பு சென்னையை சேர்ந்த ஆலோசகர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: