சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5.09 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டமைப்பு வசதி

சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
1970ம் ஆண்டு அரும்பாக்கத்தில், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை 110 படுக்கை வசதிகளுடன் நிறுவப்பட்டது. இது தற்போது சித்தா, வர்மா, ஆயுர்வேதா மற்றும் யுனானி ஆகிய மருத்துவ சிகிச்சைகளுக்கு 310 படுக்கை வசதிகள் கொண்டுள்ளது. அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி 1985ம் ஆண்டு பழனியில் துவங்கப்பட்டு பின் 1993ம் ஆண்டு சென்னை, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட சித்த மருத்துவ பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 60 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். 3 ஆண்டுகள் கொண்ட பட்டமேற்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது, இதில் ஆண்டுக்கு 34 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம், குணப்பாடம், நோய்நாடல், குழந்தை மருத்துவம், புற மருத்துவம், வர்மம் மருத்துவம் மற்றும் யோக மருத்துவம் என ஏழு துறைகள் உள்ளன. இக்கல்லூரியில் அமைந்துள்ள பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளில் 300க்கு அதிகமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அரசினர் சித்த மருத்துவக்கல்லூரி பட்ட மேற்படிப்பு மாணவிகளுக்கான விடுதிக்கு ரூ.2.59 கோடி மதிப்பீட்டில் கூடுதல் தளத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. மேலும் சென்னை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கல்விசார் பயிற்சி கூடத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் கூடுதல் தளத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. மேலும், அரசினர் யுனானி மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கான விடுதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படுகிறது. எனவே மொத்தம் ரூ.5.09 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5.09 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டமைப்பு வசதி appeared first on Dinakaran.

Related Stories: