கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பஸ்கள் இயங்க வேண்டும்: அமைச்சர் கேகர்பாபு திட்டவட்டம்

சென்னை: திரு.வி.க.நகர் மண்டலம் சூளை அஷ்டபுஜம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. தினமும் 5,000க்கும் மேற்பட்ட பயணிகள் வருகிறார்கள். இப்பேருந்து முனையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றார்போல் அரசு செயல்பட முடியாது. மக்களுடைய தேவைகளுக்கும், மக்களுடைய விருப்பத்திற்கும் தான் அரசு செயல்பட முடியும்.

ஏற்கனவே ஆம்னி பேருந்து உரிமையாளர்களோடு பேருந்து முனையம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, போக்குவரத்து துறை செயலாளர், எங்கள் துறையினுடைய வீட்டு வசதித் துறை செயலாளர், உறுப்பினர் செயலர், போன்றோர்களோடு கலந்தாலோசித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களோடு கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். அந்த கூட்டத்திலேயே கடந்த மாதம் 30ம் தேதி ஆம்னி பேருந்து திறக்கப்பட்டவுடன் படிப்படியாக ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்று அறிவித்திருந்தார்கள். மீண்டும் அவகாசம் கேட்டபிறகு ஜனவரி 24ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்று கூறியிருந்தார்கள். இப்பொழுது திடீரென்று நாங்கள் இயக்ககுவதற்கு தயாராக இல்லை என்கிறார்கள்.

அரசு அவர்களுடைய விருப்பம்போல் செயல்பட முடியாது, மக்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல் தான் அரசு செயல்படும். ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு முழுமையாக தடை செய்யப்படும். ஆம்னி பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்படும், பயணிகளுக்கு தேவையான வசதிகளையும், பேருந்துகளுக்கு தேவையான வசதிகளையும் முழுமையாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும், போக்குவரத்து துறையும் செய்து கொடுத்து இருக்கின்றோம். ஆகவே ஒத்து கொண்டதைப்போல் ஆம்னி பேருந்துகளை கிளம்பாக்கத்தில் இருந்து இயக்குவதற்கு பேருந்து உரிமையாளர்களும், சங்கங்களும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சொன்ன வார்த்தையை காப்பாற்றும் நோக்கோடு ஆம்னி பேருந்து உரிமையாளர்களும், சங்கங்களும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

* கலவரம் ஏற்படுத்த நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்
அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ராமர் கோயிலை வைத்து மக்களை மதத்தால் பிளவுபடுத்தலாம், கலவரத்தை ஏற்படுத்தலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே. அரசியல் வேறு ஆன்மிகம் வேறு என்று தமிழக மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். அரசியலை ஆன்மிகத்துடன் கலந்து அதில் லாபம் பெறலாம் என்று நினைப்பவர்களுக்கு தமிழகம் உகந்த மாநிலம் இல்லை. அப்படி நினைப்பவர்களுக்கு மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். ராமர் கோயில் திறப்பு விழா அன்று தமிழ்நாட்டில் 3 கோயில்களில் முழு நேர அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளோம். பாஜ தலைவர் அண்ணாமலைக்கு உதாரணம் கூட சொல்லத் தெரியாது, எப்போதும் தின்பண்டங்கள் மீது தான் ஆசை. மாநில தலைவராக பொறுப்பேற்கும் முன்பு ஒரு கொடி கம்பம், சுவரொட்டி கூட ஒட்டியது கிடையாது, பொது கூட்டம் நடத்தியவர் இல்லை, அங்கு பேசியது கிடையாது, ஆகவே திமுகவின் இளைஞர் அணி மாநாட்டை பற்றியெல்லாம் என்ன தெரியும் என்றார்.

The post கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பஸ்கள் இயங்க வேண்டும்: அமைச்சர் கேகர்பாபு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: