மாவட்டத்தில் தைபூச திருவிழாவையொட்டி சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர், ஜன. 21: திருவள்ளூர் மாவட்டத்தில் தைபூச திருவிழாவையொட்டி சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வி.தேவாரம் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கிராமமான திருப்பாச்சூரில் உள்ள தங்கனூர் கிராம மைதானத்தில் தைபூசம் மற்றும் சுதந்திர தின விழாக்களையொட்டி சேவல் சண்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 26 முதல் 28ம் தேதிவரை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த சேவல் சண்டை நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில், கடந்த மாதம் 31ம் தேதி மனு கொடுத்தோம். எங்கள் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, திட்டமிட்டபடி எங்கள் கிராமத்தில் சேவல் சண்டை நடத்துவதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சதீஷ்குமார், சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சேவல் சண்டை நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். கடந்த ஆண்டும் இதேபோல் சேவல் சண்டைக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்று வாதிட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெவிக்கப்பட்டுள்ளது. சேவல் சண்டையில் பங்கேற்கும் பலர் மது அருந்தி வரும் நிலையும், சாதி ரீதியான பிரச்னையும் உள்ளதால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிபந்தனைகளுடன் ஜனவரி 27 மற்றும் 28ம் தேதி சேவல் சண்டை நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

நிபந்தனையில், சேவல் சண்டை நிகழ்ச்சியை அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர் கண்காணிக்க வேண்டும். சேவல் சண்டையில் சேவல்களுக்கு காயம் ஏற்படக்கூடாது. போட்டியில் பங்கேற்கும் சேவல்களுக்கு மது உள்ளிட்ட எந்த போதை பொருளும் தரக்கூடாது. சேவல்களின் கால்களில் விஷம் தடவிய கத்திகளை கட்டக்கூடாது. இதை கால்நடை மருத்துவர் உறுதிப்படுத்த வேண்டும். கால்நடை மருத்துவர் மற்றும் பாதுகாப்புக்கு வரும் போலீசாருக்கான செலவுகளை மனுதாரர் ஏற்க வேண்டும். தேவையற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்ய வேண்டும். சமூக தலைவர்களை வாழ்த்தி பாடல்களை ஒலிபரப்பக்கூடாது. பிளக்ஸ்களையோ அல்லது சமுதாய தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பேனர்களையோ வைக்க கூடாது. இதை மனுதாரர் உறுதி படுத்த வேண்டும்.

அனைத்து நிபந்தனைகளையும் கடைபிடிப்பதாக சம்மந்தப்பட்ட போலீசில் மனுதாரர் உத்தரவாத பத்திரம் தரவேண்டும். சேவல் உரிமையாளர்களை தவிர வேறு நபர்கள் போட்டி நடைபெறும் இடத்தில் இருக்க கூடாது. பார்வையாளர்களுக்கு தனி இடம் அமைக்கப்பட வேண்டும். தகுதியுள்ள சேவல்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும். அதில் ஆட்சேபனை இருந்தால் சம்மந்தப்பட்ட போலீசார் அது குறித்து முடிவு எடுக்கலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் போட்டியை நிறுத்தி சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post மாவட்டத்தில் தைபூச திருவிழாவையொட்டி சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: