காற்று இல்லாவிட்டாலும் தேசிய கொடி பறக்கும் : கோவை நிறுவனம் அசத்தல் கண்டுபிடிப்பு

கோவை : காற்று இல்லாவிட்டாலும் தேசிய கொடி கம்பீரமாக பறக்கும் புதிய தொழில்நுட்பத்தை கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.கோவை பொள்ளாச்சி ரோடு கிணத்துக்கடவு பகுதியில் ‘எல்ஜி எக்யூப்மென்ட் லிமிடெட்’ என்னும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் ஏர் கம்ப்ரஷர் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் தற்போது, காற்று இல்லாவிட்டாலும் கொடிக்கம்பத்தில் தேசிய கொடி கம்பீரமாக பறக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இது பற்றி இந்நிறுவன நிர்வாக இயக்குனர் ஜெய்ராம் வரதராஜ் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நான், புதுடெல்லி சென்றபோது, நம் தேசிய கொடி பொருத்திய கொடிக்கம்பத்தை நிமிர்ந்து பார்த்தேன். அப்போது போதிய அளவில் காற்று இல்லை. அதனால், தேசிய கொடி பறக்கவில்லை. தாழ்வாக பூமியை நோக்கி தொங்கிய நிலையில் இருந்தது.

இதைக்கண்டதும், எனது மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது, காற்று வீசாவிட்டாலும், நம் தேசிய கொடியை பறக்க வைக்க வேண்டும், இதற்காக நாம் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் என உறுதி எடுத்தேன். கோவை திரும்பியதும், எங்களது நிறுவனத்தில் உள்ள சிறந்த 5 ெபாறியாளர்களை தேர்வு செய்து, இதற்காக தனி குழு அமைத்தேன்.

இந்த குழுவின் தீவிர முயற்சிக்கு பிறகு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இந்த ஆராய்ச்சியின்போது ஆரம்பத்தில் அடுத்தடுத்து தோல்வி ஏற்பட்டது. ஆனாலும், விடா முயற்சி மேற்கொண்டு, இதில் வெற்றி கண்டுள்ளோம். இந்த ஆராய்ச்சிக்காக நாங்கள் 2 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். அதாவது, 200 அடி உயரம் உள்ள கம்பத்தில்கூட நம் தேசிய கொடியை, காற்று இல்லாத சூழ்நிலையிலும் கம்பீரமாக பறக்க வைக்க முடியும். இதற்காக, பிரத்யேகமாக கொடி கம்பம் தயாரித்துள்ளோம்.

இந்த கம்பத்தில், மேல்நோக்கியவாறு, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு, 6 இடங்களில் தலா 2 மின்விசிறிகள் வீதம் மொத்தம் 12 மின்விசிறிகள் பொருத்தியுள்ளோம். தேசிய கொடி, கீழே தொங்காத வகையில், மேல்நோக்கி காற்றை செலுத்தும் வகையில் இந்த மின்விசிறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளியேறும் காற்று, தேசிய கொடியை எக்காரணம் கொண்டும் கீழே தொங்கவிடாது. 24 மணி நேரமும் சீரான நிலையில் நம் தேசிய கொடி பறக்கும் வகையில் இந்த ெதாழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மின்விசிறிகள், மின்சார உதவியுடனும், சூரிய மின்சக்தி உதவியுடனும் இயங்கும். மழை நேரத்தில், கொடி நனைந்து கீழே தொங்காத வகையிலும், அதிதீவிரமாக காற்று வீசும் நிலையிலும், மிக குறைந்த அளவில் காற்று வீசும் நிலையிலும், தேசிய கொடி சீராக பறக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தனித்தனி சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது, இயற்கையின் தட்டவெப்ப நிலைக்கு ஏற்றவாறு இயங்கும். நாங்கள் ஏற்கனவே, கம்ப்ரஷர் உற்பத்தி துறையில் இருப்பதால், இப்புதிய கண்டுபிடிப்பு எங்களுக்கு சாத்தியமாயிற்று. வரும் 26ம் தேதி இந்திய குடியரசு தின விழா அன்று கிணத்துக்கடவில் உள்ள எங்களது நிறுவனத்தில் இப்புதிய தொழில்நுட்பத்துடன், நமது தேசிய கொடியை ஏற்ற உள்ளோம். எங்களது கண்டுபிடிப்பில் வர்த்தக நோக்கம் இல்லை.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், எங்களிடம் உதவி கோரினால், எங்களது தொழில்நுட்பத்தை வழங்க தயாராக உள்ளோம். இப்புதிய தொழில்நுட்பத்தை எல்ஜி நிறுவனம், இந்திய நாட்டிற்கு சமர்ப்பிக்கிறது. இவ்வாறு ஜெய்ராம் வரதராஜ் கூறினார்.

The post காற்று இல்லாவிட்டாலும் தேசிய கொடி பறக்கும் : கோவை நிறுவனம் அசத்தல் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: