குழந்தை வேலாயுத சுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

 

காரமடை, ஜன.20: கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் கோவில்களில் காரமடை அடுத்துள்ள குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில் இருந்து வருகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டின் புதிய திருத்தேர் பெருந்திருவிழா நேற்று மதியம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, சேவற்கொடிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து பின்னர் கொடி மரம் கொண்டு வரப்பட்டது.

அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியானது கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது, பக்தர்களின் அரோகரா, அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது. இந்நிகழ்ச்சியில் குருந்தமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குழந்தை வேலாயுத சுவாமியின் அருளாசி பெற்றுச்சென்றனர்.

தொடர்ந்து வரும் 23ம் தேதியன்று வள்ளி மலையில் அம்மன் அழைப்பு பூஜை, 24ம் தேதி திருக்கல்யாண உற்சவம், யானை வாகன உற்சவம் உள்ளிட்டவையும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி மாலை கோலாகலமாக நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் வனிதா சிறப்பாக செய்திருந்தார். இந்த ஆண்டில் புதிதாக செய்யப்பட்ட திருத்தேரில் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post குழந்தை வேலாயுத சுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: