திமுக இளைஞரணி சார்பில் மாநில உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நாளை மறுநாள் நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை

சேலம்: சேலத்தில் திமுக இளைஞரணி சார்பில் ‘மாநில உரிமை மீட்புமாநாடு’ நாளை மறுநாள் (21ம் தேதி) நடக்கிறது. இதில் பங்கேற்க கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை (20ம்தேதி) மாலை சேலம் வருகிறார். மாநாட்டிற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக இளைஞர் அணியின் முதல்மாநில மாநாடு 2007ம் ஆண்டு நெல்லையில் கோலாகலமாக நடந்தது. அதன் பிறகு இளைஞரணியின் வரலாற்று சிறப்பு மிக்க இரண்டாவது மாநாடு மாங்கனி மணக்கும் சேலத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் சென்னையில் கடும்புயல், தென்மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு போன்ற காரணங்களால் கடந்தாண்டு டிசம்பர் 17ம்தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட மாநாடு 2முறை தேதி ஒத்திவைக்கப்பட்டது. அரசின் சீரிய முயற்சிகளால் வெள்ளம்பாதித்த பகுதிகள் அனைத்தும் இயல்புநிலைக்கு திரும்பியது. இதையடுத்து திமுக இளைஞரணி மாநில மாநாடு நாளை மறுதினம் (21ம் தேதி) சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ேகாலாகலமாக நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் கட்சி நிர்வாகிகள், சிறப்பாக செய்துள்ளனர். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 9 லட்சம் சதுரடி பரப்பளவு கொண்ட மைதானத்தில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து ெகாண்டு உரையாற்றுகிறார். இதற்காக அவர் நாளை (20ம்தேதி) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4 மணிக்கு சேலம் காமலாபுரம் வருகிறார். அவருக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து கார் மூலம் முதல்வர், பெத்தநாயக்கன்பாளையம் செல்கிறார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் திமுக தொண்டர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர். இதனை ஏற்றுக்ெகாள்ளும் முதல்வர், மாநாடு பந்தலை வந்தடைகிறார்.

அங்கு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் இளைஞரணி டூவீலர் பேரணியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். இதையடுத்து டிரோன்களின் சிறப்பு ஒளி காட்சியை காண்கிறார். அதன்பிறகு மாநாட்டு பந்தலை பார்க்கிறார். இரவு உணவிற்கு பிறகு ஓய்வெடுக்கிறார். 21ம்தேதி காலை 9 மணிக்கு திமுக இளைஞரணி மாநில உரிமை மீட்பு மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மாநாட்டு நிகழ்ச்சிகளின் நிறைவாக மாலை 6 மணிக்கு முதல்வர் சிறப்புரையாற்றுகிறார். 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று கருதப்படும் மாநாட்டில், கட்சியினருக்கான இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திடலில் இருந்து மாநாட்டு நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கானோர் கண்டுகளிப்பதற்கான வசதிகளும் துரிதமாக செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு நுழைவு வாயில்கள் ஒவ்வொன்றும் வண்ணமயமாக கண்களை ஈர்த்து நிற்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் உருவங்கள் பொறிக்கப்பட்டு கோட்டை போல் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பரந்து விரிந்த பந்தல் அலங்காரமும் தனித்துவமாக உள்ளது. இதேபோல் இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திமுக கழகத்தின் வரலாற்றை விளக்கும் வண்ண ஓவியங்கள், மாநில உரிமைகளை மீட்பது தொடர்பான எழுச்சி முழக்க வாக்கியங்கள் என்று ஒவ்வொன்றும் மக்களின் மனதில் நிறைந்து நிற்கிறது. இதனால் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்லும் தளமாக மாநாட்டு திடல் ஜொலிக்கிறது. மாநாட்டு திடல் மட்டுமன்றி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இளைஞரணி நிர்வாகிகள், மக்களுக்கு அழைப்பு விடுத்து ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்துள்ளனர். மாநாட்டையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்காக 4 டிஐஜிக்கள், 20 எஸ்.பிக்கள் உள்பட 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

The post திமுக இளைஞரணி சார்பில் மாநில உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நாளை மறுநாள் நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை appeared first on Dinakaran.

Related Stories: