3வது சுற்றில் ஆண்ட்ரீவா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, 16 வயது ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா தகுதி பெற்றார். 2வது சுற்றில் துனிசியா நட்சத்திரம் ஆன்ஸ் ஜெபருடன் (29 வயது, 6வது ரேங்க்) நேற்று மோதிய ஆண்ட்ரீவா (47வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-0, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றி பெற்றார். இப்போட்டி வெறும் 54 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காஃப் (19 வயது, 4வது ரேங்க்) 7-6 (7-2), 6-2 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை கரோலின் டோல்ஹைடை வீழ்த்தினார்.

முன்னணி வீராங்கனைகள் ஹடாட் மாயா (பிரேசில்), அரினா சபலெங்கா (பெலாரஸ்), பார்போரா கிரெஜ்சிகோவா (செக்.), மார்தா கோஸ்ட்யுக், லெசியா சுரெங்கோ (உக்ரைன்), அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா), பவுலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். கிரீஸ் நட்சத்திரம் மரியா சாக்கரி, கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ், கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) ஆகியோர் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

ஜோகோவிச் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நேற்று களமிறங்கிய நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீரருமான நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 4-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் 3 மணி, 11 நிமிடம் போராடி ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்பிரினை (24 வயது, 43வது ரேங்க்) வீழ்த்தினார். முன்னணி வீரர்கள் அலெக்ஸ் டி மினார் (ஆஸி.), யானிக் சின்னர் (இத்தாலி), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஆந்த்ரே ருப்லேவ், கரென் கச்சனோவ் (ரஷ்யா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

The post 3வது சுற்றில் ஆண்ட்ரீவா appeared first on Dinakaran.

Related Stories: