தேனி மீறுசமுத்திரம் கண்மாயில் படகு சவாரி எப்போது: பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா

தேனி: தேனியில் உள்ள மீறுசமுத்திரம் கண்மாயில் படகு சவாரி அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தேனி நகரில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே மீறுசமுத்திரம் கண்மாய் சுமார் 102 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியான வீரப்ப அய்யனார் கோயில் மலைப்பகுதியில் இருந்து பனசலாற்று வழியாக வரும் நீரினை ஆதாரமாக கொண்டு இக்கண்மாய்க்கு நீர்வருகிறது. மீறுசமுத்திரம் நீரினை கொண்டு சுமார் 54 ஹெக்டேர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தேனி நகர் மத்தியில் உள்ள மீறுசமுத்திரம் கண்மாயால், அதனைச் சுற்றியுள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கான நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மிகக் குறைந்த ஆழத்திலேயே நீர் கிடைத்து விடுவதால் தேனி நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காரணியாகவும் இக்கண்மாய் இருந்து வருகிறது.

தேனி நகரானது, மாவட்ட தலைநகரான கடந்த 27 ஆண்டுகளில் மக்கள் தொகை ஒன்றே கால் லட்சத்தை தாண்டியுள்ளது. தேனி நகரில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில், பொழுதுபோக்கு அம்சம் என்பதற்கான எவ்வித வசதியும் இல்லாத நிலை நீடித்து வருகிறது. நடை நோய்க்கு தடை என கூறப்படுகிறது. இத்தகைய நடைபயிற்சியானது நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலமாக சீரான ரத்த ஓட்டம், நுரையீரல் சரியாக விரிவடைவது, இருதய துடிப்பு போன்றவற்றிற்கு மிகவும் உதவியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய நடைபயிற்சி மேற்கொள்ள தேவையான மைதானம் தேனியில் இல்லை.

தேனி நகர் மத்தியில் உள்ள மீறுசமுத்திரம் கண்மாய் கரையில் நடைமேடை அமைத்தால் தேனி நகரில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கேற்ப வசதி ஏற்படும். நடைபயிற்சி மேடை அமைக்கும்போது சிறுவர்கள் விளையாடவும், குடும்பத்தினர் குழந்தைகளுடன் வந்து குதூகலிக்கவும் விளையாட்டு பூங்கா அமைக்க வேண்டும் எனவும், மேலும், கண்மாய்க்குள் வருடம் முழுவதும் நீர் நிரம்பியே இருப்பதால் பூங்காவை ஒட்டி படகுகுலாம் அமைத்து, கண்மாய்க்குள் படகு சவாரி விட வேண்டும் என நீண்ட காலமாக தேனி நகர பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மீறுசமுத்திரம் கண்மாயில் படகுதுறை அமைத்து நடைபயிற்சி மேடை அமைத்து சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்க நகராட்சி கவுன்சிலர்கள் கூடி தீர்மானம் நிறைவேற்றினர்.

ஆனால், பொதுப்பணித்துறை நிர்வாகம் இக்கண்மாயை நகராட்சியிடம் ஒப்படைத்தால்தான் இத்தகைய பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற சிக்கல்காரணமாக இப்பணி நீண்டகாலமாக தேனி மக்களின் கனவாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மீறுசமுத்திரம் கண்மாயில் படகுதுறை அமைத்து, நடைபயிற்சி மேடை மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க ரூ.14 கோடி வரை ஆகும். இத்திட்டத்திற்கு சுற்றுலாத் துறை நிர்வாகம் பொதுப்பணித்துறையிடம் திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்ப கேட்டு நிதி ஒதுக்கீடு செய்துகொடுத்ததால் இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து கொடுக்கலாம்’ என்றனர்.

The post தேனி மீறுசமுத்திரம் கண்மாயில் படகு சவாரி எப்போது: பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா appeared first on Dinakaran.

Related Stories: