புதுகை வன்னியன்விடுதி, ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 1,450 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்


புதுக்கோட்டை: புதுகை வன்னியன்விடுதி, திருச்சி ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தது. இதில் 1,450 காளைகள் சீறி பாய்ந்தது. 570 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இனி வரிசையாக ஆங்காங்கே என மாவட்டத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும். குறைந்தது 5 மாதங்களுக்கு இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வன்னியன்விடுதி சித்தி விநாயகர் மாயன் பெருமாள் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி இன்று(17ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக கடந்த சில நாட்களாக கோயில் வளாகத்தில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர் மாடம் அமைக்கும் பணி நடந்தது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகள், 270 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசேதாதனை செய்தனர்.

காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து மற்ற ஊர் காளைகள் அவிழ்க்கப்பட்டது. வாடிவாசலில் பல காளைகள் நின்று விளையாடி சிம்மசொப்பனமாக திகழ்ந்தது. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். களத்தில் காளைகள் முட்டி காயமடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க அங்கேயே மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கக்காசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, சேர், சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. ஏடிஎஸ்பி பிரபாகர் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஜல்லிக்கட்டு களத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர். ஆவாரங்காடு: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாலக்குறிச்சி ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் 650 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றது.

முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விட்டது. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தது. காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், எவர்சில்வர் பாத்திரம், வெள்ளி காசு, ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. ஏடிஎஸ்பி குத்தாலிங்கம் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post புதுகை வன்னியன்விடுதி, ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 1,450 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: