அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பு: சீறிப்பாயும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆறாம் சுற்று நிறைவு பெற்றுள்ளது. மதுரை அருகே, அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகள் இதையடுத்து ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாய முறைப்படி முதலாவதாக முனியாண்டி சுவாமி கோயில் காளை உள்ளிட்ட 3 கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தங்கக்காசு வழங்கப்பட்டது.

இதையடுத்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. ஒரு சுற்றுக்கு 100 காளைகள் மற்றும் 50 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். மொத்தம் 1200 காளைகளும், 700 வீரர்களும் களமிறங்கியுள்ளனர். மாலை 5 மணி வரை 10 சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும், பிடி கொடாத சிறந்த காளைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படுகிறது.

மேலும், வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் டூவீலர், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, சைக்கிள், தங்கம், வெள்ளிக் காசுகள், பித்தளை, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போது 6 சுற்றுகள் நிறைவடைந்து 7வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 51 பேர் காயமடைந்துள்ளனர். வீரர்கள் -23, காளை உரிமையாளர்கள் – 9, பார்வையாளர்கள் – 15, காவலர்கள் – 3, பணியாளர் 1 என 51 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 51 பேரில் 4 பேர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பு: சீறிப்பாயும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: