கோத்தகிரி பேரூராட்சி மூலம் புகையில்லா போகி விழிப்புணர்வு

 

கோத்தகிரி, ஜன.14: கோத்தகிரி பேரூராட்சி மூலம் புகையில்லா போகி மற்றும் பொங்கல் விழா கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராஹிம் ஷா தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் முன்னிலை வகித்தார்.
இதில் பொதுமக்களுக்கு எனது குப்பை எனது பொறுப்பு என்பதை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் வீடுகள், கடைகளில் உள்ள பழைய டயர்கள், துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், பழுதடைந்த மின்சாதன பொருட்கள், பாய்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரிப்பதை தவிர்க்க வேண்டும்.

மாறாக அப்பொருட்களை பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடமோ, நடமாடும் சிறப்பு கழிவு சேகர வாகனங்களிலோ அல்லது அதற்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களிலோ ஒப்படைக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை எரிப்பதால் புவி வெப்பமடைவதுடன், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இதனால், பயன்படுத்தக்கூடிய பழைய துணிகள் உள்ளிட்ட பிறருக்கு உதவும் பொருட்களை தீயிட்டு எரிக்காமல் அப்பொருட்கள் கிடைக்காமல் வாழும் பொதுமக்களுக்கு இன்முகத்தோடு வழங்க வேண்டும்.

கழிவுகள் என்பது உற்பத்தி செய்யப்படுவதில்லை உருவாக்கப்பட்டுபவை என்பதை உணர்ந்து இயற்கைக்கு மாசு ஏற்படாதவாறு புகையில்லா போகி மற்றும் பொங்கல் விழா கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி உதவி இயக்குநர் இப்ராஹிம் ஷா தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத்தலைவர் உமாநாத், மன்ற உறுப்பினர்கள், நுகர்வோர் அமைப்பினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கோத்தகிரி பேரூராட்சி மூலம் புகையில்லா போகி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: