படுகர் தினவிழா கோலாகலம்: பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற மக்கள்

மஞ்சூர், மே 16: குந்தை சீமை படுகர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற படுகர் தின விழாவில் பாரம்பரிய வெள்ளை உடைகளை அணிந்து படுகரின மக்கள் திரண்டனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக படுகரின மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஆண்டுதோறும் மே மாதம் 15ம் தேதி தங்களது சமுதாய (படுகர்) தினமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், குந்தை சீமை நல சங்கத்தின் சார்பில் இரண்டாம் ஆண்டு படுகர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

முன்னதாக, மஞ்சூர் மாரியம்மன் கோயில், ஹெத்தையம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து அன்னமலை முருகன் கோயில் மண்டபத்தில் விழா நடைபெற்றது. விழாவிற்கு குந்தை சீமை பார்ப்பத்தி மாதாகவுடர் தலைமை தாங்கினார்.

எடக்காடு கணபதி, மஞ்சூர்ஹட்டி நஞ்சன், எடக்காடு பரமசிவன், முள்ளிமலை போஜாகவுடர், படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர் மஞ்சை மோகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். பாக்கொரை அர்ஜுணன் வரவேற்று பேசினார். நலசங்க செயலாளர் கெரப்பாடு சுரேஷ் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து, குந்தை சீமை நலச்சங்க தலைவரும் முன்னாள் மாவட்ட நீதிபதியுமான சந்திரன் படுகர் சமுதாய கலாசாரம், பாரம்பரியம், சமுதாய ஒற்றுமை குறித்து விளக்கி பேசினார். மேலும் சமுதாய முன்னேற்றம் குறித்து முக்கிய பிரமுகர்கள் பேசினார்கள். இதை தொடர்ந்து மாணவ, மாணவிகள், இளைஞர்களின் ஆடல், பாடல்களுடன் படுகரின கலாச்சார கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

விழாவில் கீழ்குந்தா, மட்டகண்டி, தூனேரி, பாக்கொரை, மணிக்கல், மஞ்சூர், கரியமலை, கண்டிபிக்கை, கெட்சுகட்டி, முள்ளிமலை, மேல்குந்தா, கெரப்பாடு, பிக்கட்டி, ஒசட்டி, முள்ளிகூர், முக்கிமலை, எடக்காடு, காந்திகண்டி உள்பட 28 கிராமங்களில் இருந்து தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஆண்கள், பெண்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட படுகரின மக்கள் பரம்பரிய வெள்ளை உடைகளை அணிந்தபடி பங்கேற்றார்கள். முடிவில் நல சங்க பிரமுகர் இந்திரராஜன் நன்றி கூறினார்.

The post படுகர் தினவிழா கோலாகலம்: பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: