கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

 

ஈரோடு, ஜன. 14: கீழ்பவானி பாசன பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்காக கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன வாய்க்காலில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான முதல்போக சாகுபடிக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்க்காலின் தலைமடை பகுதிகளில் ஆங்காங்கே அறுவடை பணிகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அறுவடை பணிகள் பாசன பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வசதியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டுள்ள பகுதிகளில் முதல்கட்டமாக 51 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்ததும் மேலும் பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கப்பட உள்ளதால் கூடுதல் இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

The post கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: