கடும் வெயில் பாதிப்பை கட்டுப்படுத்த முன்னேற்பாடு குறித்து ஆய்வு கூட்டம்

* தினமும் சீரான குடிநீர் விநியோகம்
* பஸ் நிறுத்தங்களில் நீர்மோர் பந்தல்

ஈரோடு, மே 9: ஈரோட்டில் கடும் வெயிலால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த முன்னேற்பாடு பணி மற்றும் சீரான குடிநீர் விநியோகம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் தமிழக அரசின் முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஜி.பிரகாஷ் தலைமையிலும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையிலும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக வெப்ப அலை ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அரசின் முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஜி.பிரகாஷ் தலைமை தாங்கினார். ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ஈரோடு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் நாள்தோறும் வழங்கப்படும் குடிநீர் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் குடிநீர் அளவு, இதர பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் சொந்த நீர் ஆதாரங்களின் மூலம் வழங்கப்படும் குடிநீர் அளவு ஆகியவை குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் பேசியதாவது: கோடை காலங்களில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து உறுதி செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தமாக, முறையாக பராமரிக்க வேண்டும்.

நாள்தோறும் வழங்கப்படும் குடிநீரின் தரத்தினை சுகாதாரத்துறை அலுவலர்கள் குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள் முறையாக அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். தற்போது கோடை வெப்பம் அதிகமாக உள்ள காரணத்தினால் பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப், வழிபாட்டுத்தலங்கள் போன்ற முக்கியமான இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும்.  மாவட்டத்தில் அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை அனைத்துத்துறை அலுவலர்களும் பின்பற்றி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொது மக்களுக்கு குடிநீர் வைக்க வேண்டும். பொதுமக்கள் அமர நாற்காலிகளை ஏற்படுத்த வேண்டும். வயதானவர்கள் அரசு அலுவலகங்களுக்கு வரும் போது, அவர்களை அலைக்கழிக்காமல் உடனடியாக அவர்களுக்குரிய தீர்வினை ஏற்படுத்த வேண்டும்.

பொது சுகாதார துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளபடி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் முக்கியமான இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்கள் வைக்க வேண்டும். வனத்துறையின் சார்பில் வனப்பகுதிகளில் ஏற்படும் தீ போன்றவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், விலங்குகளுக்கு தேவையான தண்ணீரை குடிநீர் தொட்டிகளின் மூலம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) டாக்டர்.மணீஷ், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முகமது குதுரத்துல்லா (பொது), செல்வராஜ் (வளர்ச்சி), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வனத்துறை, மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கடும் வெயில் பாதிப்பை கட்டுப்படுத்த முன்னேற்பாடு குறித்து ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: