இன்னும் 20 நாட்களில் 160 வேட்பாளர்களின் பட்டியல் ரிலீஸ் ஜனவரி இறுதியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்: 70 வயதுக்கு மேற்பட்ட 56 எம்பிக்களுக்கு மீண்டும் சீட் கிடையாது


புதுடெல்லி: லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணிகளை பாஜக முடுக்கிவிட்டுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வரும் பிப்ரவரியில் தேசிய கவுன்சில் கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தலைவர்களுக்கு தேர்தல் உத்திகள் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் இம்மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் 150 முதல் 160 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக பிரதமர் மோடி தலைமையில் கட்சியின் மத்திய தேர்தல் குழு இந்த மாத இறுதியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் 7,000 நிர்வாகிகளுக்கு அழைப்பு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை எடுத்துரைப்பதுடன், கட்சியின் நிறுவன கட்டமைப்பை விரிவுபடுத்தவும், தேர்தல்களில் அதிக இடங்களை கைப்பற்றுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படும். இதன்பிறகு முதல் கட்ட வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்படும்.

கட்சிக்குள் உட்கட்சி பூசல்கள் ஏற்படாமல் இருக்க இளைஞர்கள், பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், விகே சிங், ராவ் இந்தர்ஜித் சிங், பாத் நாயக், அர்ஜுன் ராம் மேக்வால், கிரிராஜ் சிங், மூத்த தலைவர்கள் ராஜேந்திர அகர்வால், ரவிசங்கர் பிரசாத், எஸ்எஸ் அலுவாலியா, பிபி சவுத்ரி, சந்தோஷ் கங்வார், ராதா மோகன் சிங், ஜகதாம்பிகா பால் உள்ளிட்ட 56 பாஜக எம்பிக்கள் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். அதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது கேள்விக்குரியாகி உள்ளது.

கட்சிக்கு பெரும் பங்காற்றும் தலைவர்கள் பலர் சீனியர்கள் என்பதால், நாடாளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தேவை என்பதால், வேட்பாளர் தேர்வில் வயது மட்டும் முக்கியமல்ல என்றும் பாஜக தலைமை கூறி வருகிறது. அதனால் சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் சீட் வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. கடந்த 2019ல் 437 ெதாகுதிகளில் போட்டியிட்ட பாஜக 303 இடங்களை கைப்பற்றியது. அதிமுக, சிரோன்மணி அகாலி தளம் போன்ற கட்சிகள் கூட்டணியில் இல்லாததால், அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிட கவனம் செலுத்தி வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post இன்னும் 20 நாட்களில் 160 வேட்பாளர்களின் பட்டியல் ரிலீஸ் ஜனவரி இறுதியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்: 70 வயதுக்கு மேற்பட்ட 56 எம்பிக்களுக்கு மீண்டும் சீட் கிடையாது appeared first on Dinakaran.

Related Stories: