அணைவதற்கு முன் விளக்கு பிரகாசமாகத்தான் எரியும் ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக எங்கு இருக்கிறது என தெரியாது: ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி

காரைக்குடி: விளக்கு அணைவதற்கு முன் பிரகாசமாகத்தான் எரியும். ஜூன் 4க்கு பின் அதிமுக எங்கு இருக்கிறது என தெரியாது என அண்ணாமலை தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இறங்கினார். அவரை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வது பிரதமரின் தனி நிகழ்வு, சொந்த நிகழ்வாக அங்கு சென்றுள்ளார். இதற்கும், கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. அதனால் தான் அரசும் எங்களது அனுமதி பெற தேவையில்லை என கூறியுள்ளது. ஜெயலலிதா பல்வேறு காலகட்டங்களில் பேசியதை நான் சொல்லியுள்ளேன். இதனை தாண்டி புதிதாக நான் எதையும் சொல்லவில்லை. இந்துத்துவா என்பதின் உண்மையான விளக்கத்தை கூறியுள்ளேன். அதிமுகவினர் குறுகிய வட்டத்தில் உள்ளனர். இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை எங்கேயும் அவமதிக்க மாட்டேன். அப்படி அவமதித்தால் இந்து மதத்திற்கு நான் செய்யும் தவறாக அமைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் வைத்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்டபோது அண்ணாமலை கூறுகையில், ‘ஜூன் 4க்கு பிறகு அதிமுக கட்சி எங்கு இருக்க போகிறது என பார்க்கத்தான் போகிறீர்கள். ஜூன் 4க்கு பிறகு எத்தனை இடங்களில் வெற்றி பெற போகிறார்கள் என பார்ப்போம். எப்போதும் அணைய போகிற விளக்கு பிரகாசமாகத்தான் எரியும் என சொல்வார்கள். விமர்சனங்கள் ஏன் கடுமையாக உள்ளது என்றால் விளக்கு அணையப் போகிறது என அர்த்தம். ஜூன் 4க்கு பிறகு அனைவரும் இங்குதான் இருக்க போகிறோம். தேர்தல் முடிவுகளை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள். அன்று பார்ப்போம். எந்த கட்சி தமிழகத்தில் மக்கள் மனதில் இடத்தை பிடித்துள்ளது. எந்த கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது என பார்ப்பீர்கள். அதன்பிறகு அனைவருக்கும் தெரியும்’ என்றார்.

 

The post அணைவதற்கு முன் விளக்கு பிரகாசமாகத்தான் எரியும் ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக எங்கு இருக்கிறது என தெரியாது: ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: