புன்னகையால் பாராளும் பேரரசி காமாட்சி

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேஸ மானஸா

இதனுடைய பொதுப் பொருள் என்னவெனில், அம்பிகையானவள் தனது புன்சிரிப்பின் பிரவாகத்தில் காமேஸ்வரருடைய மனதை மூழ்கச் செய்தவள் என்பதாகும். நாம் லலிதா சஹஸ்ரநாமத்தை பாராயணமாகச் செய்யும்போது ஒரே நாமத்தைக் கூட பலமுறை தனியாக உட்கார்ந்து சொல்லிக்கொண்டே இருப்பது நல்லது. அப்படிச் சொல்லும்போது அந்த வார்த்தையிலும் அந்த வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் பொருளையும் அறிந்து கொள்ளலாம். அதாவது தனியாக அமர்ந்து மீண்டும் மீண்டும் இப்போது சொல்லப்பட்ட கருத்துகளை மனதிற்குள் செலுத்தலாம்.

அப்போதுதான் அந்த நாமத்தினுடைய தீவிரத்தன்மையே நமக்குத் புரியத் தொடங்கும். நாமத்தினூடேயே நாமத்தின் பொருளும் புரியத் தொடங்கும்போது நமக்குள் ஏதோவொன்று அம்பிகையின் அருளால் மலரத் தொடங்குகின்றது. இப்போது இந்த நாமத்திற்கு முன்பு நாம் அம்பிகையின் உதடு, பற்கள், தாம்பூலத்
தினுடைய இனிமை. வாக்கினுடைய இனிமை என்று பலவற்றினுடைய நாம விளக்கங்களை பார்த்துக்கொண்டே வருகின்றோம். இப்படி எல்லாவற்றையும் வர்ணித்துவிட்ட பிறகும், இந்த உதடுகளுக்கு முக்கியமான செயல் இருக்கிறது.

அந்தச் செயல்தான் புன்னகை. நாம் சாதாரணமாக மனிதர்களைப் பார்த்து புன்னகைத்தால் அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கின்றது. யாரோ ஒருவர் நம்மைப் பார்த்து புன்னகைத்தால் நமக்கு சந்தோஷமாக இருக்கும். அப்போது அம்பிகையாக இருக்கக்கூடியவள், அவள் அண்ட சராசரத்திற்கும் ஆனந்தம் அளிக்கக் கூடியவள். அதனாலேயே அவள் சதாசர்வ காலமும் புன்னகைத்துக் கொண்டேதான் இருப்பாள். ஏனெனில், அவளுடைய புன்னகைதான் நம்முடைய ஆனந்தத்திற்குக் காரணம்.

நாம் ஒரு ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம். அது எந்த ஆனந்தமாக வேண்டுமானாலும் இருக்கலாம். சாதாரணமாக இந்த உலகத்தின் சிறிய மகிழ்ச்சியிலிருந்து தொடங்கி பிரம்மானந்தம் வரையிலும், இன்னும் சொல்லப்போனால் அதையெல்லாம் தாண்டக்கூடிய ஆத்மானந்தம் வரையிலும் உள்ள எல்லாவற்றிற்கும் காரணம் அம்பிகையினுடைய புன்னகை. ஆனால், இந்த புன்னகையை அதாவது இந்த ஆனந்தத்தை அனுபவிக்க விடாமல் நம்முடைய கர்ம வாசனை தடுக்கின்றது. அப்படி தடுக்கும்போது தான் அதை நாம் துன்பம் என்று சொல்கிறோம். உண்மையில் இன்பம் எப்போதுமே இருக்கின்றது.

அம்பிகை எப்போதுமே புன்னகைத்துக் கொண்டேதான் இருக்கிறாள். ஆனால், நம்முடைய கர்ம வாசனை அந்த புன்னகையை அனுபவிக்க விடாமல் தடுக்கின்றது. அப்போது இந்த கர்மவாசனை தடுப்பதால் துன்பம் வருகின்றது. அந்த கர்ம வாசனை விலகும்போது இன்பம் வருகின்றது. இப்படியாக இன்ப துன்பங்கள் மாறிமாறி நம் வாழ்வில் வருகின்றது. இந்த இன்ப துன்பங்களை தாண்டி நிலையான ஆனந்தத்தை ஒருவன் அனுபவிக்க வேண்டுமெனில் அவன் ஆத்ம சாட்சாட்காரம் அடைய வேண்டும். ஆத்மா என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய சொரூபத்தை உணர வேண்டும். அப்படி உணர்ந்தால், அவன் நிலையான ஆனந்தம் அனுபவிப்பான்.

ஆத்ம சாட்சாத்காரம் அல்லது தன்னுடைய சொரூபம் என்னவெனில், அம்பிகையினுடைய புன்னகையே ஆகும். அதுதான் நம் சொரூபம். அது என்றைக்கும் நிலையானது. அப்பேர்ப்பட்ட புன்னகையையே வசின்யாதி வாக் தேவதைகள் வர்ணிக்கிறார்கள். மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேஸ மானஸா… மந்த ஸ்மித ப்ராபா பூர…. இதேபோன்ற ஒரு நாமத்தை நாம் பார்த்திருக்கிறோம். அதாவது காதுகளை வர்ணிக்கும்போது கர்ண பூர மனோஹரா… என்று வர்ணித்தார்கள். காதுகள் பூரிக்கக் கூடிய அளவு … நாம் அந்த நாமத்தை ஸ்ரவணத்திற்கு சொன்னோம். இப்போது இந்த இடத்தில் அம்பிகையினுடைய புன்னகை… மந்த ஸ்மித என்றாலே புன்னகை என்று பொருள்.

ஸ்மிதா.. என்றால் சிரித்தல். அதிலும் மந்த ஸ்மிதா… வாய்விட்டுச் சிரிக்காமல் மென்மையாக புன்னகைத்தல். இந்த மந்த ஸ்மிதம் என்பது அம்பிகையின் முகத்தில் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது. அதாவது அம்பாள் ஆனந்த சொரூபியாக இருக்கிறாள் என்று அர்த்தம். இப்போது இந்த மந்த ஸ்மிதம் என்கிற சின்ன புன்னகை என்ன செய்கின்றது எனில், மஜ்ஜத் காமேஸ மானஸா… அதாவது இந்த சின்ன புன்னகையிலிருந்து வெளியாகக் கூடிய ஒளியானது பெரிய வெள்ளம்போன்று மாறி காமேஸ்வரராகிய சிவ பெருமானுடைய மனதை மூழ்கடித்து விட்டது. மஜ்ஜத் காமேஸ மானஸா… காமேஸ்வரருடைய மனதையே மூழ்கடித்து விட்டது.

இதுதான் அம்பிகையின் சிறிய புன்னகை செய்யக் கூடியதாகும். அந்த புன்னகை பூரித்து பூரித்து அதுவே பெரிய வெள்ளமாக மாறி அந்த வெள்ளத்திற்குள் காமேஸ்வரருடைய மனதானது மூழ்கிப் போகிறது. இந்த அர்த்தத்திற்கு பிறகு இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போவோம். ஏனெனில், இந்த நாமத்தினை கொண்டுதான் நாம் மனம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளப் போகின்றோம். What is mind என்பது இந்த நாமாவிலிருந்து புரிந்து கொள்ளலாம். நாம் ஏதேனும் சந்தோஷமான உணர்வு வந்தால்… மனசு சந்தோஷப்படுது என்கிறோம்.

துன்பப்பட்டால் மனசு வலிக்கிறது என்று சொல்கிறோம். நான் யோசித்து விட்டு சொல்கிறேன்.. என் மனம் இன்னும் ஒன்னும் சொல்லலை என்கிறோம். எல்லாவற்றிற்குமே நாம் மனசு… மனசு… என்று சொல்கிறோம். இப்போது நாம் சொல்லக் கூடிய மனசு என்பது சரியான மனசுதானா… என்று பார்த்தால் நாம் சொல்லக் கூடிய மனது இருக்கிறதல்லவா… நாம் சாதாரணமான லௌகீகத்தில் சொல்லக் கூடிய மனசு உண்மையான மனசு அல்ல. நாம் உண்மையான மனதையே சொல்லவில்லை. நாம் எதைச் சொல்கிறோமெனில் combination of thoughts… bundle of thoughts… இந்த எண்ணங்களின் தொகுப்பை நாம் மனம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்,. இது உண்மையான மனசு கிடையாது.

பகவான் நமக்கு நான்கு அந்தக் கரணங்களை கொடுத்திருக்கிறார். மனசு, புத்தி, சித்தம், அகங்காரம்… இதில் ஒரு விஷயத்தை நாம் அறிந்துகொள்கிறோம். உதாரணமாக நாம் ஒரு கதையை கேட்கிறோம். கேட்டவுடனே ஆஹா… நன்றாக இருக்கிறதே… இந்த கேட்கிறேன் அல்லவா… அந்தக் கதையினுடைய சாராம்சத்தை கிரகிக்கின்றேன் அல்லவா… அது மனதினுடைய வேலை. இந்த கிரகித்தலுக்குப் பிறகு இந்த கதை நன்றாக இருக்கின்றது என்று நிச்சயம் செய்கிறேன் அல்லவா? இப்படி நிச்சயம் செய்வது புத்தியினுடைய வேலை. நிச்சயம் செய்ததற்கு பிறகு இந்தக் கதையை திருப்பி திருப்பி என் மனசுக்குள் இந்த கதை நல்லாயிருக்கே… நல்லாயிருக்கே… என்று மீண்டும் மீண்டும் சிந்தித்துக் கொண்டேயிருப்பது நம் சித்தத்தின் வேலை.

அதற்குப் பிறகு, நான் இந்தக் கதையை நன்றாக இருந்ததால் இதைக் கேளுங்கள் என்று சொல்வோம். ‘‘நான் இந்தக் கதையை கேட்டேன். நன்றாக இருந்தது‘‘‘ என்கிற வாக்கியம் ஆரம்பிக்கும்போதே அந்த வாக்கியத்தினுடைய தொடக்கத்திலேயே நான் எனும் வார்த்தை இருக்கிறது. கதையை கேட்டதற்கும்… அது நல்லாயிருக்கு என்று நிச்சயித்ததற்கும்… மீண்டும் மீண்டும் சிந்தித்ததற்கும் எது அடித்தளமாக இருக்கிறது எனில் நான் என்கிற இருப்பு. இந்த இருப்பு இல்லையென்றால், இந்த அகங்காரம் என்கிற அடித்தளம் இல்லையென்றால் … நான் என்று ஒன்றே இல்லையெனில் நாம் எதைக் கேட்க முடியும். எதை
நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியும்.

எதைச் சிந்திக்க முடியும். அப்போது அகங்காரம், இருப்பு என்கிற அடித்தளம் இருக்கிறது. அந்த இருப்புக்கு மேலே சித்தம். அதற்கு மேலே புத்தி. புத்தி நல்லதா கெட்டதா என்று நிச்சயிக்கின்றது. நல்லதா இருந்தால் நல்லது என்றும், இல்லையெனில் இல்லை என்று சொல்கிறது. அது நல்லது என்று சொல்கிறதெனில் அந்த மனசு கிரகித்துக் கொள்கிறது. அப்போது மேல் மட்டத்தில் இருப்பது மனசு. அதற்கு கீழே புத்தி. அதற்கும் இன்னும் சூட்சுமமாக இருக்கக் கூடியது சித்தம். அந்தச் சித்தத்தை விட இன்னும் சூட்சுமமாக இருக்கக் கூடியது அகங்காரம். இந்த நான்கையும் அந்தக் கரணங்கள் என்று சொல்கிறோம். இந்த நான்கையும் சேர்த்து மனசு என்று சொல்கிறோம்.

ஆனால், மனசு சரியில்லை என்கிறோம். உண்மையில் மனசு சரியில்லை என்பதல்ல. புத்தி சரியில்லை. ஒன்றை கெட்டது என்று நிர்ணயம் செய்துவிட்டால் நமக்கு மனது சரியிருக்காது. ஆனால், புத்தியின் வேலை இது. ஆனால், மீண்டும் மீண்டும் இந்தக் கதையை நன்றாக சொல்லியிருக்கிறார் என்றால் அது சித்தத்தினுடைய வேலையாகும். சித்தம்தான் மீண்டும் மீண்டும் சிந்திக்கின்றது. இதை modern psychology , conscious mind, sub conscious mind என்று பிரிக்கிறார்கள். மேல் மட்டத்தில் இருப்பதை mind என்கிறார்கள்.

அதற்கடுத்து conscious mind என்கிறார்கள். அதைவிட இன்னும் கீழே சென்றால் sub conscious mind என்று சொல்கிறார்கள். இதோடு அவர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால், நாமோ மேலே சொன்னவையாக நான்காக பிரித்து வைத்திருக்கிறோம். இப்போது நான்கு அந்தக்கரணங்கள் போக மனது என்கிற தத்துவம் இருக்கிறதல்லவா… இந்த மனது என்கிற தத்துவம் எப்படி செயல்படுகின்றதெனில் … இந்த நான்கும் எதற்காக செயல்படுகின்றது எனில்… இந்த அந்தக்கரணங்களை பகவான் எதற்காக கொடுத்திருக்கிறார். எதற்கு இந்த கர்மேந்திரியங்கள்… எதற்கு இந்த ஞானேந்திரியங்கள்… இந்த கருவிகள் அனைத்துமே நம்முடைய ஆத்ம சொரூபத்தை உணர்ந்துகொள்ளவே கொடுக்கிறார்.

நாம் நம்முடைய கர்ம வாசனையினால நாம் அதற்கு உபயோகப்படுத்தாமல் வேறு எதற்கு பயன்படுத்துகின்றோம். அவர் கொடுப்பதை நாம் வேறு எதற்கு உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இதை எதுக்கு நமக்கு கொடுத்திருக்கிறார்… இதை எதுக்கு உபயோகப்படுத்த வேண்டுமென்று தெரிந்து விட்டதோ அதற்குப் பிறகு மற்ற விஷயத்தைப்பற்றி நாம் கவலைப்படவே வேண்டாம்.

The post புன்னகையால் பாராளும் பேரரசி காமாட்சி appeared first on Dinakaran.

Related Stories: