உலகம் உய்ய வந்த உத்தமர் ஸ்ரீ ராமானுஜர்

*ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி – 12-5-2024

1. முன்னுரை

நம் இந்திய சமய மரபில் எத்தனையோ மகான்கள் அவதரித்திருக்கின்றார்கள். அற்புதமான ஆன்மிக நெறிகளை எல்லா மக்களும் எளிமையாகப் புரிந்துகொண்டு பின்பற்றும் வண்ணம் சொல்லி இருக்கின்றார்கள். “வாழ்க்கை வேறு; வார்த்தை வேறு” என்று இல்லாமல் வார்த்தையே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்து காட்டிய நெறியாளர்கள் அவர்கள். இந்த மகான்களால்தான் நம்முடைய நாட்டிற்குப் பெருமை. “பாரத நாடு பழம் பெரும் நாடு, நீர் அதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்” என்று மகாகவி பாரதி, இந்த மகான்களை நினைத்துத்தான் பாடினார். அவர்களில் ஒருவர்தான் “உலகம் உய்ய வந்த ஸ்ரீ ராமானுஜர்’’. அவருடைய அவதார தினத்தை ஒட்டி அவருடைய பெருமைகளை “முத்துக்கள் முப்பது” என்ற இந்த தொகுப்பில் காண்போம்.

2. பகவானின் அவதாரம் ஏன்?

நம் நாட்டில் இரண்டு பெரிய சமயங்கள் சைவமும் வைணவமும். வைணவம் விஷ்ணுவை முழு முதற் கடவுளாகக் கொண்ட சமயம். வைணவ நெறியின் பெருமையை எடுத்துரைக்க மகாவிஷ்ணுவே இந்த உலகத்தில் அவதரித்தார். எத்தனையோ அவதாரங்கள் எடுத்திருந்தாலும் பத்து அவதாரங்களைச் சிறப்பாகச் சொல்வார்கள். இந்த அவதாரங்களின் மூலம் மக்களின் அற உணர்வுகளையும், ஆன்மிக உணர்வுகளையும் தூண்டிவிட்டு நல்வழிப்படுத்த வேண்டும் என்று பகவான் நினைத்தார். இதை பகவத்கீதையையின் அர்ஜுனனுக்குச் சொல்லும் பொழுது, ‘‘அர்ஜுனா, நீயும் பல பிறப்பு பிறக்கிறாய். நானும் பலபிறப்பு பிறக்கிறேன் ஆனால் ஒரே ஒரு வேறுபாடு உண்டு. நீ வினையின் காரணமாகப் பிறக்கிறாய். நான் உன் வினையிலிருந்து மீட்டெடுக்கப் பிறக்கின்றேன்” என்றார்.

3. உலக சகோதரத்துவம் ஓங்க ஒரு அவதாரம்

பகவானின் ஒவ்வொரு அவதாரத்திலும் ஒவ்வொரு நீதி சொல்லப்பட்டது. குறிப்பாக, ராமன் நடத்தையில் நின்றுயர் நாயகனாக வாழ்ந்து காட்டினான். பிதுர் வாக்கிய பரிபாலனம் என்று தந்தையின் சொல்லுக்காக 14 ஆண்டுகள் வனம் போனான். ‘‘ஒரு வில், ஒரு இல், ஒரு சொல்’’ என்று ராமனைக் கொண்டாடுவார்கள். ஏக பத்தினி விரதனாக வாழ்ந்தான். உலக சகோதரத்துவத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக ஏழை வேடனான குகனையும் வானர அரசனாகிய சுக்ரீவனையும் அரக்கர் குலத்தைச் சேர்ந்த வீடணனையும் ‘‘குகனோடும் ஐவரானோம் முன்பு; பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம்; அகனமர் காதல் ஐய! நின்னோடும் எழுவரானோம்” என்று உடன் பிறந்த சகோதரனாக ஏற்றுக் கொண்டான்.

4. கீதை பிறந்தது

அடுத்த அவதாரமாக கண்ணனுடைய அவதாரம் நிகழ்ந்தது. எங்கெல்லாம் அநீதி நிகழ்கின்றதோ, அங்கெல்லாம் தானே சென்று நீதி வழங்கினான். அதனால்தான் நேரடியாக கௌரவர்களுக்கும் கண்ணனுக்கும் எந்த பிரச்னையும் இல்லாதபோதும், பாண்டவர்களுக்காக நீதி கேட்கப் பாரதப் போரை நிகழ்த்தினான். அப்பொழுது பிறந்ததுதான் பகவத் கீதை. பகவத் கீதை என்பது இன்றைக்கு மிகச்சிறந்த ஆன்மிக நூலாக அறியப்படுகின்றது. சகல உபநிடதங்களின் சாரமாக, 18 அத்தியாயங்களில் 700 ஸ்லோகங்களில், பகவான் திருவாய் மொழிந்த அற்புதமான நூல் பகவத் கீதை என்று உலக மக்களால் போற்றப்படுகின்றது.

5. ஆழ்வார்கள் அவதாரம்

இந்த அவதாரங்கள் எல்லாம் பெரிய அளவில் கர்ம வசப்பட்ட மக்களிடம் ஆன்மிக மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்று நினைத்த எம்பெருமான், தன்னுடைய படைக்கலன்களையும் நித்தியசூரிகள் என்று சொல்லப்படுகின்ற அடியார்களையும் ஆழ்வார்களாக பிறக்க வைத்தார். இது இரண்டாவது நிலை. ஆழ்வார்கள், நம்மாழ்வார் தொடங்கி திருமங்கை ஆழ்வார் வரை 12 பேர்கள்.

“பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
அய்யன் அருள்மாறன் சேரலர் கோன் துய்ய பட்ட
நாதனன் பர்த்தாள் தூளி நற்பாணன் நல் கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாம் இங்கு’’
– என்பது இவர்கள் வரிசை.

6. நாலாயிரம் தந்த நாதமுனிகள்

ஆழ்வார்கள் அற்புதமான தமிழால் பாசுரங்கள் பாடி, வைணவ நெறியை வையமெல்லாம் பரப்பினார்கள். இவர்களுடைய தமிழ் பாடல்களின் தொகுப்பு “தமிழ் வேதம்” என்று வழங்கப்படுகிறது.
“மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் – தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்து இயல்’’.

4000 பாடல்களால் அமைந்த இந்தத் தொகுப்பை இன்றைக்கும் ஒவ்வொரு பெருமாள் கோயிலிலும், ஒவ்வொரு வைணவர்களின் இல்லங்களிலும் ஓதுகின்றார்கள், ஆழ்வார்கள். தமிழின் ஏற்றத்தை, பக்தி நெறி கலந்து பரப்பியவர்கள் ஆழ்வார்கள் அவதாரத்தை அடுத்து ஆசாரியார்கள் என்று வைணவ நெறியைப் பரப்ப சில மகான்கள் அவதரித்தனர். அதில் காட்டுமன்னார்குடியில் அவதரித்த நாதமுனிகள் பிரதம ஆசாரியராக அறியப்படுகின்றார். அவர் தம்முடைய காலத்தில் மறைந்து போன ஆழ்வார்கள் பிரபந்தங்களை தேடித் தொகுத்து நமக்கு அளித்தார். அதனால் அவரை “நாலாயிரம் தந்த நாதமுனிகள்” என்று வைணவ உலகில் கொண்டாடுவர்.

7. எதிர்காலத்தில் ராமானுஜர் அவதரிக்கப்போகிறார்

4000 பாசுரங்களையும் நாதமுனிகள், நம்மாழ்வாரிடம் நேரடியாக உபதேசம் செய்யப் பெற்றார் என்று சொல்வார்கள். அப்படி உபதேசம் செய்யும் போது எதிர்காலத்திலே கலி தோஷம் நீங்க ஒரு மகான் இந்த உலகத்திலே பிறக்கப் போகிறார் என்று நம்மாழ்வார் அறிவித்தார். அதற்கான திருவாய்மொழி பாடல்.

“பொலிக பொலிக பொலிக! போயிற்று
வல் உயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு
இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொண்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி ஆடி
உழிதரக் கண்டோம்’’

ஆக, ஒரு அவதாரம் என்பது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்பது தெரிகிறது. அவர் எப்படி இருப்பார் என்பதையும் ஒரு விக்கிரகமாக வடித்து நாதமுனிகளுக்குத் தந்ததாகச் சரித்திரம் உண்டு. எதிர்காலத்தில் தோன்றப் போகின்ற ஆச்சாரியார் இந்த திரு வடிவத்தில் இருப்பார் என்று சொல்லப் பட்டதால், அந்த விக்கிரகத்திற்கு பவிஷ்ய ஆச்சாரிய விக்ரகம் என்று பெயர் ஏற்பட்டது. (பவிஷ்யம் என்றால் எதிர்காலம் என்று பொருள்).

8. நாதமுனிகள் காத்திருந்தார் ஆளவந்தார் கண்டெடுத்தார்

நாதமுனிகள் தம் காலத்தில் இப்படி ஒரு ஆச்சாரியார் அவதரிப்பார் என்று காத்திருந்தார். ஆனால், அவர் காலத்தில் அது நடக்கவில்லை. ஆயினும் தன்னுடைய சீடர்களிடம், இந்த விக்கிரகத்தைக் கொடுத்து, இந்த திருவுருவத்தில் ஒரு மகான் எதிர்காலத்தில் அவதரிப்பார் என்பதைச் சொல்லிச் சென்றார். நாதமுனிகளுக்குப் பிறகு அவருடைய பேரனான ஆளவந்தார் வைணவ சமயத்தின் தலைவராகி, திருவரங்கத்தில் இருந்து வைணவத்தை வளர்த்து வந்தார்.

அப்பொழுதுதான் தம்முடைய காலத்துக்குப் பின் வைணவத்தை வளர்க்க யார் வரப்போகிறார்கள், அவரைக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று பெருமாளிடம் பிரார்த்திக்க, காஞ்சிபுரத்தில், திருக்கச்சி நம்பிகள் என்கின்ற ஆசாரியனின் சீடனாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு தீர்த்தக் கைங்கரியம் செய்துகொண்டிருந்த ஒரு இளைஞனைத் தூரத்தில் இருந்து பார்த்து ஆஹா நம் கையில் கொடுக்கப் பட்டிருக்கக் கூடிய விக்கிரகம் போலவே இவருடைய திருவுருவம் இருக்கிறது (ஆம் முதல்வன் இவன்) என்று எண்ணி தம்முடைய சீடர்களிடம் எப்படியாவது இவரைத் திருவரங்கத்திற்கு அழைத்து வந்து வைணவ சமயத் தலைவராகப்பொறுப் பேற்கச் செய்து வைணவத்தை வளர்க்க வேண்டும் என்று நியமித்தார்.

9. ஸ்ரீராமானுஜரின் அவதாரம்

இறையருளால் நம்மாழ்வாரால் அடையாளம் காட்டப்பட்டு, பின்னால், ஆளவந்தார் என்கின்ற மகானால் ஆசீர்வதிக்கப்பட்டு வைணவ சமயத்தின் தலைவராக வாழ்ந்தவர்தான் ஸ்ரீ ராமானுஜர். வேதம் பூர்ண ஆயுள் 100 வயது என்கிறது. ஆனால், ஜோதிஷ சாஸ்திரத்தின்படி 120 ஆண்டுகள் அதாவது இரண்டு பூர்த்தியான விம்சோத்தரி தசை காலம் பூர்ண ஆயுள் என்பார்கள். ஸ்ரீ ராமானுஜர் 120 ஆண்டு காலம் இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்து மகத்தான செயல்களைச் செய்தார்.

ஸ்ரீ ராமானுஜரின் அவதாரம் ஸ்ரீபெரும்புதூர் எனும் திருத்தலத்தில் நிகழ்ந்தது. அங்கே தினமும் யாகங்களை செய்யும் அக்னி ஹோத்ரியான, ஹாரித கோத்திரம் ஆசூரி வம்சத்தைச் சேர்ந்த கேசவ சோமயாஜி என்ற வேதியர் வாழ்ந்து வந்தார். அவருடைய துணைவியார் காந்திமதி என்ற பெயருடன் எப்பொழுதும் சாந்தம் தவழும் மதி நிறைந்த முகத்தோடு இருந்தார். வேதச் செல்வமும் பக்திச் செல்வமும் நிறைந்த அவர்களுக்குக் குழந்தைச் செல்வம் இல்லை.

அதற்காக திருவல்லிக்கேணி சென்றார்கள். அங்கே ஸ்ரீ பார்த்தசாரதி பெருமானைச் சேவித்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர். அப்பொழுது பெருமாள் அவர்கள் கனவில் தோன்றி, ‘‘நாமே உமக்குக் குழந்தையாக அவதரிப்போம்’’ என்று சொன்னார். பெருமாளின் வாக்குப்படி, 1017 ஆம் ஆண்டு சித்திரை திங்கள் 12 ஆம் நாள் வளர்பிறை பஞ்சமி திதியில் வியாழக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீ ராமானுஜர் உலகம் உய்ய அவதரித்தார்.

10. ஸ்ரீ ராமானுஜரின் ஜாதகம்

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைப் போலவே இவரும் உத்தமமான கடக லக்னத்தில் அவதரித்தவர். திருவாதிரை நட்சத்திரத்தில் அவதாரம் என்பதால், மிதுன ராசியில் அவதரித்தார். சிம்ம ராசியில் செவ்வாயும், விருச்சிக ராசியில் கேதுவும், தனுசு ராசியில் சனியும், மேஷ ராசியில் சூரியனும் புதனும் சுக்கிரனும், ரிஷப ராசியில் ராகுவும், மிதுன ராசியில் குருவும் அமர்ந்த அற்புத கிரக நிலையில் ஸ்ரீ ராமானுஜரின் அவதாரம் நிகழ்ந்தது.

பொதுவாகவே, ஒரு மகானின் ஜாதகத்தைத் தரிசித்தால் நம் ஜாதக தோஷம் எல்லாம் நீங்கிவிடும். காரணம் என்ன என்று சொன்னால், நம்முடைய ஜாதகத்தில் கிரகங்கள், நமக்கு நாம் செய்த வினையின் எதிரொலியாக, (நல்ல கெட்ட) பயன் தருவதற்காக நிற்கின்றன. ஆனால், மகான்களின் ஜாதகத்தில் அவர்களுடைய செயல்கள் எப்படி நடக்க வேண்டும் என்கின்ற இறை ஆணையின் வண்ணம் கிரகங்கள் இருக்கின்றன.

11. குருவே சீடரானார்

கருவில் திரு உடையவராக அவதரித்த ஸ்ரீ ராமானுஜர், கல்வி கேள்விகளில் மிகச் சிறந்து விளங்கினார் கண்ணன். எப்படி உலகுக்காக சாந்திபினி முனிவரிடம் கல்வியைக் கிரகித்தானோ, அதைப் போல பல ஆச்சாரியார்களிடம் ஸ்ரீ ராமானுஜர் தம்முடைய கல்வியைக் கிரகித்தார். முதலில் அவர் தம்முடைய தந்தையையே குருவாக எண்ணி பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார். அதற்குப் பிறகு வேதாந்தம் படிப்பதற்காக காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி என்ற திவ்யதேசத்தில் வசித்த யாதவ பிரகாசர் என்கின்ற அத்வைத பண்டிதரிடம் பாடம் படித்தார். உபநிஷத் வாக்கிய விளக்கங்களில் அவ்வப்பொழுது குருவுக்கும் சீடருக்கும் சில கருத்து வேறுபாடுகள் வந்தாலும், பின்னால் ஸ்ரீ ராமானுஜர் மிகப் பெரிய புகழை அடைந்தபொழுது, அவருக்கு ஆரம்ப பாடம் சொல்லித்தந்த (பூர்வ பாகம்) யாதவப் பிரகாசரே சீடராகச் சேர்ந்தார் இனி அவரின் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான சம்பவங்களைக் காண்போம்.

12. மூன்று உறுதிமொழிகள்

ராமானுஜரின் ஐந்து ஆசாரியர்களுக்கும் ஆச்சாரியாராக இருந்தவர் சுவாமி நாதமுனிகளின் பேரரான ஆளவந்தார். ஆளவந்தாரை ஸ்ரீராமானுஜர் நேரடியாகத் தரிசிக்க ஆவல் கொண்டிருந்தார். அதற்கான அழைப்பு வந்தது. தன் காலத்துக்கு பின் ராமானுஜரிடம் வைணவத் தலைமையை ஒப்படைத்துவிட வேண்டும் என்று நினைத்து அந்திமகாலத்தில் ஆளவந்தார் பெரிய நம்பிகளை அனுப்பி ராமானுஜரை அழைத்து வரச் செய்தார். ஆனால், அவர் திருவரங்கம் வந்து சேர்வதற்குள் ஆளவந்தார் பரமபதம் அடைந்து விட்டார். ஆனாலும், அவருடைய கை விரல்கள் மூன்று மடங்கி இருந்தன. இதனை அறிந்த ராமானுஜர் அவருக்கு ஏதோ மூன்று குறிக்கோள்கள் இருந்தன என்பதை உணர்ந்து அவற்றை ஆச்சாரியன் கட்டளையாகக் கருதி நிறைவேற்றித் தருவதாக வாக்களித்தவுடன் மடங்கியிருந்த ஆளவந்தாரின் விரல்கள் நிமிர்ந்தன அவர் வாக்களித்த மூன்று விஷயங்கள்.

1. வேதவியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு வைணவ நெறியின் (விசிஷ்டாத்வைத) அடிப்படையில் ஒரு உரை காண்பது.

2. வேதங்களைத் தொகுத்துக் கொடுத்த வியாசரையும், விஷ்ணுபுராணம் எழுதிய பராசர பட்டரையும் பெருமைப்படுத்தி அவருடைய புகழைப் பரப்புவது.

3. வேதம் தமிழ் செய்த மாறனாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழியை பரப்புவது அதற்கு உரை காண்பது.

13. மதுராந்தக மகிழ மரத்தடி

ஸ்ரீ ராமானுஜருக்கு பல ஆச்சாரியார்கள் இருந்தனர். குறிப்பாக, ஐந்து ஆச்சாரியார்களைச் சொல்வார்கள். இந்த ஐந்து ஆசாரியர்களிடமிருந்தும் அவர் ஒவ்வொரு சிறப்பான விஷயத்தை கிரகித்தார். இவருக்கு பஞ்ச சம்ஸ்காரம் தந்து திருமந்திரம் உபதேசித்த நேரடி ஆச்சாரியர் ஸ்ரீ பெரிய நம்பிகள். அவர்தான் மதுராந்தகத்தில் இவருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்தார். அவர் பஞ்ச சம்ஸ்காரம் செய்த உபகரணங்கள் (சங்கு சக்கரம்) இன்றும் மதுராந்தகம் ஸ்ரீ ராமர் கோயிலில் காணலாம். ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி அன்று ஆண்டுதோறும் மதுராந்தகத்தில் பஞ்ச சம்ஸ்கார உற்சவம் நடைபெறுகின்றது. மதுராந்தகத்தை துவையம் விளைந்த திருப்பதி என்று கொண்டாடுவார்கள். கருவறைக்கு பின் உள்ள மகிழ மரத்தடியில்தான் இந்த வைபவம் நடந்தது.

14. பதினெட்டுமுறை நடந்தார்

மிகவும், ரஹஸ்யமான சரம சுலோகத்தினுடைய சிறப்பான அர்த்தங்களைக் கற்றுக் கொள்வதற்காக 18 முறை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு நடந்தே சென்றார். பதினெட்டு முறையும் ஒவ்வொரு சிறப்பான விஷயத்தைப் பெற்றதாகவும் சொல்வார்கள். கடைசியில் 18வது முறை அவருக்கு “தகுதி இல்லாதவர்களுக்கும், கற்றுக் கொள்ள வேண்டும் என்று கடுமையான முயற்சி இல்லாதவர்களுக்கும் இந்த அர்த்தங்களைக் கூறக்கூடாது”, என்ற நிபந்தனையுடன் திருக்கோஷ்டியூர் நம்பி சரம சுலோகத்தினுடைய அர்த்த விசேஷத்தை அவருக்கு உபதேசம் செய்தார். ராமானுஜர் மகிழ்ச்சியோடு கற்றுக் கொண்டார். ஆனால், அவர் மனம் திருப்தி அடையவில்லை.

இவ்வளவு சிரமப்பட்டுதான் மட்டும் தெரிந்து கொண்டதால் அவர் உள்ளம் நிறைவடையாது தவித்தது. என்ன செய்யலாம் என யோசித்தார். “தன்னைப் போலவே ஒவ்வொருவரும் இந்த நிபந்தனையை பின்பற்ற முடியுமா, அப்படிப் பின்பற்ற ஆற்றல் இல்லாதவர்கள் இந்தப் பிறவியை வீணாக்க வேண்டியதுதானா?” எனக் கலங்கினார்.

15. ஆசை உடையோர் எல்லாம் வாருங்கள்

அடுத்த நாள் இந்த ரஹஸ்யார்த்தத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையுடைவர்களை அழைத்து, அந்த அர்த்தத்தை மிகவும் விளக்கமாகக் கூறினார். தமக்கு அளித்த சத்தியத்தை ராமானுஜர் மீறி அர்த்த விசேஷத்தை வெளியிட்டதை திருக்கோட்டியூர் நம்பி கேள்விப்பட்டவுடன், தன்னைச் சந்திக்குமாறு அவருக்கு உத்தரவிட்டார். ராமானுஜரும் நம்பி திருமாளிகைக்கு எழுந்தருளினார். நம்பி ராமானுஜர் செய்ததைக் கேட்டறிந்தார், ராமானுஜரும் அதற்கு நம்பியினுடைய நிய மனத்தை தான் மீறினதாக ஒப்புக்கொண்டார். நம்பி “ஊரவர்க்கு உரைத்து உமக்கு என் பெற்றீர்?” என்று கேட்டபோது, ராமானுஜர் “தேவரீருடைய ஆணையை மீறியதால் நரகம் பெற்றேன்’’ என்றார்.

‘‘தெரிந்துமா செய்தீர்?’’ என்று நம்பி கேட்க, ‘‘அடியேனுக்கு வேண்டுமானால் நரகம் கிடைக்கும், ஆனால் பலருக்கு (சரம் ஸ்லோகார்த்தத்தைக் கற்றவர்களுக்கு) மிக உயர்ந்த மோட்சும் (பரம பதம்) கிடைக்குமல்லவா” என்று கூறினார். மற்றவர்கள் உய்ய வேண்டும் என்று கிருபையோடு இருக்கும் ராமானுஜருடைய பரந்த திருவுள்ளத்தைப் பார்த்த திருக்கோட்டியூர் நம்பி மிகுந்த மகிழ்ச்சியோடு அவருக்கு “எம்பெருமானார்” என்ற திருநாமத்தைச் சூட்டினார்.

16. காரேய் கருணை ராமானுஜர்

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு பாசுரம் செய்தார் திருவரங்கத்து அமுதனார். அந்த பாசுரம் இது.

“காரேய் கருணை இராமானுச, இக் கடலிடத்தில்
ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்வந்து நீஎன்னை உய்த்தபின் உன்
சீரே உயிர்க்குயிராய், அடியேற்கு இன்று தித்திக்குமே.’’

இதன் பொருள் அபாரமானது. மேகம் போன்று பலன் எதிர்பாராமல் அனைத்து உயிர்களுக்கும் அருளும் கருணை கொண்ட ராமானுஜரே! உம்முடைய கருணையின் அளவை, கடல் சூழ்ந்த இந்த உலகில் உள்ள யார்தான் முற்றிலுமாக அறிவார்கள்? ஆனால், நான் இதனை உணர்ந்துவிட்டேன். எப்படித் தெரியுமா? அனைத்து விதமான துக்கங்களுக்கு இருப்பிடமாக, நான் இருந்தேன். எனது துன்பங்கள் கண்ட நீர் இந்த உலகில் அவதரித்தீர். நீ வந்து ஆட்கொண்ட பின்னர், உனது பிராணனே எனக்கு பிராணனாக அமைந்துள்ளது. உயர்ந்த உமது திருக்கல்யாண குணங்கள் அனைத்தும் தேன், பால், அமுதமுமாகதித்திக்கிறது.

17. திருமாலை ஆண்டான்

ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர் திருமாலை ஆண்டான். இவர் மாலாதாரர் என்றும் ஸ்ரீ குணபூர்ணர் என்றும் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார். ராமானுஜரின் மூன்றாவது ஆச்சாரியாரான இவரிடம் நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியின் அர்த்த விசேஷங்களைக் கற்றார். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. திருமாலை ஆண்டான் எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களை தாம் ஆளவந்தாரிடம் கற்றுக் கொண்டபடி உபதேசித்தார்.

அப்போது இடையிடையே சில பாசுரங்களுக்குத் தமக்குத் தோன்றிய அர்த்தங்களை ராமானுஜர் எடுத்துரைத்தார். அது கேட்டு திருமாலை ஆண்டான் எம்பெருமானார் தனக்குத் தோன்றிய அர்த்தங்களை எல்லாம் கூறுகிறார் அவையெல்லாம் ஆளவந்தாரிடம் தாம் கேட்டவை அல்ல என்று எண்ணினார். தன் மனத்துக்குத் தோன்றியபடி அர்த்தங்களைக் கூறும் ராமானுஜருக்கு இனி தன் பாடங்கள் தேவையில்லை என்று காலக்ஷேபத்தை நிறுத்திவிட்டார்.

18. ஆதிசேஷன் அம்சம்

அதைக் கேள்விப்பட்ட திருக்கோட்டியூர் நம்பி உடனே திருக்கோட்டியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வந்தார். நடந்ததைக் கேட்டறிந்தார். “எம் பெருமானார் தொடர்ந்து தன் மனத்துக்குத் தோன்றியபடி, தாம் ஆளவந்தாரிடம் கேட்டறியாத புதுப் புது அர்த்தங்களை சொல்லிக் கொண்டு வருவதாக திருமாலை ஆண்டான் கூறினார். திருகோட்டியூர் நம்பி ஒரு பாசுரத்தை பல கோணங்களில் சிந்திக்கலாம், ராமானுஜர் கூறிய அர்த்தத்தை ஆளவந்தாரிடம் தாம் கேட்டிருப்பதாகவும், அந்த பாசுரத்திற்கு அது நியாயமான விளக்கமே என்றும் கூறினார்.

மேலும், அவர் எம்பெருமான் (கண்ணன்) எவ்வாறு சாந்தீபனியிடம் கற்றுக் கொண்டாரோ அது போன்றே ராமானுஜரும் உம்மிடம் திருவாய்மொழி கற்றுக் கொள்கிறார் என்றும், மேலும், ஆளவந்தாரின் இதயத்தில் இல்லாத எந்தக் கருத்தையும் அவர் சொல்ல மாட்டார் என்றும், எனவே ராமானுஜருக்குத் தெரியாத எதையும் நீர் கற்றுக் கொடுப்பதாக எண்ண வேண்டாம் என்றும் கூறினார்.

19. என்னைவிடச் சிறியவர் யாரும் இல்லை

ராமானுஜரின் இன்னொரு ஆசாரியர் பெரிய திருமலை நம்பிகள். திருவேங்கடமுடையானின் இன்னருளால் திருமலையில் அவதரித்தவர். ஆளவந்தாரின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவருக்கு ஸ்ரீசைலபூர்ணர் என்ற திருநாமமும் உண்டு. தினமும் திருவேங்கடமுடையானுக்காக இவர் ஆகாசகங்கையிலிருந்து (திருமலையில் உள்ள நீர் ஆதாரம்) தீர்த்தம் கொண்டு வருவார். ஸ்ரீ ராமானுஜரின் தாய் மாமனான இவர், ராமானுஜருக்கு இளையாழ்வார் என்று பேர் வைத்தவர் பெரிய திருமலை நம்பிகளிடம் சரணாகதி சாத்திரமான ராமாயணத்தின் அர்த்தங்களைத் தெரிந்து கொண்டார். எம்பெருமானார்.

ஒருமுறை எம்பெருமானார். திருமலைக்குச் சென்றார். திருமலை நுழைவு வாயிலில் பெரிய திருமலை நம்பிகள் வந்து அவரை வரவேற்றார். தமது முதுமையையும் கருதாது தம்மை வரவேற்ற பெரிய திருமலை நம்பிகளைப் பார்த்து எம்பெருமானார், “அடியேனை வரவேற்க யாரேனும் சிறியவர்கள் (வயதில்) இல்லையோ?” என்று கேட்க, அதற்கு நம்பி பெருந்தன்மையுடன் “எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன், என்னை விடச் சிறியவர் யாருமே இல்லை” என்று கூறினார்.

20. எம்பெருமானே ஆசார்யர்களாக அவதரித்திருக்கிறார்கள்

ஆளவந்தாரின் குமாரனான திருவரங்கப் பெருமாள் அரையர் இசை, அபிநயம், நாடகம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினார். இவரையும் தமது ஆசாரியராக ஏற்றார் ராமானுஜர். திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தாரின் நியமனப்படி இராமானுஜருக்கு அருளிச்செயல் சிலவற்றையும் சரமோபாயமும் (ஆசாரிய நிஷ்டை அர்த்தச் சிறப்பு) உபதேசித்தார் இதை சாதாரணமாக கற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு நியம நிஷ்டையாக ஆறு மாத காலம் தொண்டு புரிந்தார். அவருக்கு இதமான சூட்டில் பால் அமுது செய்யக் கொடுத்தார். அரையருக்குத் தேவையான பொழுது அவருக்கு மஞ்சள் அரைத்துச் சாற்றினார்.

அவர் ரங்கநாதர் முன்னால் ஆடிக் களைத்தபோது அவருக்கு இதமாகத் தூக்கம் வர திருமேனியைப் பிடித்து விடுவார். ஒருமுறை எம்பெருமானார் அரையருக்கு மஞ்சள் அரைத்துச் சாற்றினார். ஆனால், அதில் அரையர் மனம் உகக்காததை அவருடைய முக பாவானையிலேயே கண்டறிந்தார். பின்னர் மறுபடியும் மஞ்சள் அரைத்து ஆசார்யன் மனம் உகக்கும் படி சாற்றி ஆசார்ய கைங்கர்யத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். திருப்பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமானே ஆசார்யர்களாக அவதரித்திருக்கிறான் என்பதனை உணர்த்தினார் (அப்போது ராமானுஜர் வைணவத் தலைமைப் பீடத்தில் இருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்).

21. திருக்கச்சி நம்பிகள்

மூலமாக காஞ்சிபுரம் பெருமாள் தந்த செய்திராமானுஜர் தனக்கு நல் விஷயங்களைச் சொல்லுகின்ற ஒவ்வொரு வரையும் தமது குருவாகவே கருதினார். அவர் காஞ்சிபுரத்தில் இருந்த பொழுது வரதராஜ பெருமாளுக்கு திரு ஆலவட்ட கைங்கரியம் புரியும் (ஸ்வாமிக்கு விசிறி வீசுதல்) திருக்கச்சி நம்பிகளிடம் சீடராக இருந்தார். மணவாழ்க்கையில் விரக்தி அடைந்த சூழலில், தான் அவதரித்த நோக்கத்தின்படி தம் வாழ்வை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற நிலையில், காஞ்சி வரதராஜ பெருமாளின் (பேரருளாளன்) வழிகாட்டுதலை வேண்டினார். அப்பொழுது காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை அருளிச் செய்தார். பிரசித்தி பெற்ற அந்த ஆறு வார்த்தைகள் வைணவ நெறிக்கு மிகச்சிறந்த தூண்கள் ஆகும்.

22. ஆறு வார்த்தைகள் அந்த ஆறு வார்த்தைகள்

1. நாமே பரம் பொருள்

2. ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு

3. இறைவனாகிய நாராயணனைச் சரணடைவதே மோட்சத்திற்கு வழி

4. சாஸ்திரம் சொல்லுகின்ற சாகும் நேரத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை (அந்திம நிஷ்டை) வைணவனுக்குத் தேவையில்லை.

அதாவது, அவனால் தனது இறப்பு காலத்தில் இறைநாமத்தை உச்சரிக்க முடியாது. அவன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் போது செய்த நாமஸ்மரணமே போதும். இதை பெரியாழ்வார் பின் வரும் பாசுரத்தில் எளிமையாகச் சொல்லியிருக்கிறார்.

“துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத்
துணையாவ ரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு
நீ அருள்செய் தமையால்
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது
அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!’’
5. பகவானை முழுமையாக நம்பியவர்களுக்கு உலக வாழ்க்கை முடிந்தவுடன் அதாவது நுகர்வினை காரணமாக வந்த இந்த உடல் வாழ்க்கை முடிந்த பிறகு மோட்சம் நிச்சயம்.
6. மகாபூர்ணரான பெரிய நம்பியை குருவாகக் கொண்டு அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

23. திருப்பாவை ஜீயர்

ஸ்ரீ ராமானுஜருக்கு எத்தனையோ திருநாமங்கள் உண்டு. துறவிகளுக்கு தலைவர் என்பதால் ‘‘எதிராஜர்’’ என்றும், எம்பெருமானைவிட கருணை கொண்டவர் என்பதால், ‘‘எம்பெருமானார்’’ என்றும், எல்லா செல்வங்களையும் உடைய என்பதால் ‘‘உடையவர்’’ என்றும், வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு உரை வகுத்தவர் என்பதால் ‘‘ஸ்ரீ பாஷ்யக்காரர்’’ என்றும், பல திருநாமங்கள் உண்டு. திருப்பாவையில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு எல்லையற்றது. ஆண்டாள் என்ன மனநிலையில் திருப்பாவை பாசுரத்தைப் பாடினாளோ அதே மனநிலையில் இவரும் உருகி உருகி திருப்பாவையில் ஈடுபட்டதால் இவரை ‘‘திருப்பாவை ஜீயர்’’ என்று அழைத்தார்கள்.

24. ஆண்டாளுக்கு அண்ணன்

ஒவ்வொரு சொற்களுக்கும் வலிமையும் உயிர்ப்பும் உள்ளது என்பதை செயல் முறையில் காட்டியவர் ஸ்ரீ ராமானுஜர். ஆண்டாள் திருமாலிருஞ்சலை அழகருக்கு 100 தடா வெண்ணையும் 100 தடவை அக்கார அடிச்சிலும் சமர்ப்பித்ததாக ஒரு பாசுரத்தில் வேண்டிக் கொண்டாள்.

“நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ!’’

ஸ்ரீ ராமானுஜர் இந்தப் பாசுரத்தைப்பாடுகின்ற பொழுது, ஆண்டாள் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் என்று மனதால் சங்கல்பித்துக் கொண்டாளே, அவளுடைய எண்ணம் நிஜத்தில் பூர்த்தியாக வேண்டுமே என்று நினைத்து உடனே திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தடா வெண்ண்யும் 100 தடா அக்கார அடிசிலும் சமர்ப்பித்து மன நிறைவுகொண்டார். அடுத்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எழுந்தருளிய, ஒரு தங்கையின் மனக் குறையை அண்ணன் தீர்த்து வைப்பது போல, ஸ்ரீ ராமானுஜர் தம்முடைய மனக்குறையை பாசுரத்தில் ஊகித்து தீர்த்து வைத்தாரே, என்பதைக் கருதி, ‘‘அண்ணாவே’’ என்று அழைத்துக் கொண்டு கர்ப்ப கிரகத்தை விட்டு சற்று வெளியே வந்தாள் என்று சொல்வார்கள். இந்த வரலாறு வாழித் திருநாமத்தில்
“ஸ்ரீபெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே” என்று இருக்கிறது.

25. திருவாய்மொழிக்கு முதல் உரைநூல்

ஸ்ரீ ராமானுஜருக்கு நம்மாழ்வார் அருளிய தமிழ் வேதமாகிய திருவாய் மொழியின் மீது எல்லை கடந்த ஈடுபாடுதான் பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதுகின்ற பொழுது, தெளிவில்லாத சில இடங்களில் திருவாய்மொழியின் பாசுரங்களைக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவார். தம்முடைய சீடர்களுக்கு, திருவாய்மொழியை உலகெங்கும் பரப்ப வேண்டும்; ஒவ்வொரு வைணவனும் திருவாய் மொழியைக் கற்று அதன் படி ஒழுக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஸ்ரீ ராமானுஜர் காலத்திற்கு முன்னால் வரை ஆழ்வார்களின் அருளிச் செயலுக்கு காலட்சேப முறையில் உரை சொல்லி வந்தார்கள். அது எழுத்து வடிவம் பெற வேண்டும் என்று, தம்முடைய அபிமான புத்திர ராகிய திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்பவரை நியமித்தார் அவர் எழுதிய உரைதான் திருவாய்மொழிக்கு முதல் வியாக்கியானம்
(6000 படி வியாக்யானம்)

26. அற்புதமான குருமார்கள், ஆச்சரியமான சீடர்கள்

சிலருக்கு நல்ல குருமார்கள் கிடைப்பார்கள். சீடர்கள் கிடைக்க மாட்டார்கள். அதைப் போலவே சிலருக்கு நல்ல சீடர்கள் கிடைப்பார்கள். குருமார்களை அவர் தேடித்தான் செல்ல வேண்டி இருக்கும். ஆனால், ஸ்ரீ ராமானுஜருக்கு மிகச் சிறந்த குருமார்கள் கிடைத்தார்கள். அந்த குருமார்களுக்கு நிகரான சீடர்களும் கிடைத்தார்கள்.

இப்படி குருமார்கள் ஒரு பக்கமும் சீடர்கள் ஒரு பக்கமும் இருக்க மணிமாலையின் நடுப் பதக்கம் போல ராமானுஜர் இருந்தார் என்று ஒரு ஸ்லோகம் கூறும். அவருடைய சீடர்களில் மிகச் சிறந்தவர் கூரத்தாழ்வான் அடுத்து முதலியாண்டான், எம்பார், பிள்ளை உறங்கா வில்லி தாசர், கிடாம்பி ஆச்சான், வடுக நம்பிகள், அருளாளப் பெருமானார் எம்பெருமானார் என்று சொல்லிக்கொண்டே போகலாம் இந்த சீடர்கள் ஒவ்வொருவரும் பின்னால் மிகச் சிறந்த குருமார்களாக திகழ்ந்தார்கள்.

27. தெரியாததைத் தெரியாதது என்று சொல்பவர்

ஸ்ரீ ராமானுஜர் ஒரு விஷயத்தைப் பூரணமாகத் தெரிந்துகொள்ளாமல் யாருக்கும் தெரிவிக்க மாட்டார். தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவும் மாட்டார். அதற்கு விளக்கமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம் திரு மங்கை ஆழ்வார் சீர்காழியில் பாடிய ஒரு பாசுரம். இதில் “தெட்டப்பழம்” என்று ஒரு வார்த்தை வரும். இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்பது தெரியவில்லை ஏதாவது ஒரு பொருளை ஊகித்துச் சொல்லி இருக்கலாம்.

ஆனால், ராமானுஜர் தம் சீடர்களிடம்,” தனக்குப் பொருள் தெரியவில்லை; தெரிந்தால் கூறுகிறேன்” என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டார். ஒருமுறை அவர் சீர்காழி திவ்ய தேசத்தில் யாத்திரை மேற்கொண்ட பொழுது மரத்தில் ஏறி பழங்களை அடித்துக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தார். அதில் ஒரு சிறுவன் ‘‘டேய், நல்ல தெட்ட பழமாகப் போடு’’ என்று சொன்னதைக் கேட்ட ராமானுஜர், அந்தச் சிறுவனை அழைத்து, தெட்ட பழம் என்றால் என்ன? என்று கேட்க, சிறுவன்’’ இது தெரியாதா? தெட்ட பழம் என்றால் கனிந்த பழம் என்று பொருள் என்று சொல்ல, அந்தச் சிறுவனிடம் இருந்து ஒரு சொல்லுக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டோமே என்று எண்ணி மகிழ்ந்து தம்முடைய சீடர்களை அழைத்து பாசுரத்தின் அர்த்தத்தை மறுபடியும் சொன்னாராம்.

28. ராமானுஜர் இயற்றிய நூல்கள்

ஸ்ரீ ராமானுஜர் நவநிதியங்களாக 9 நூல்களை அளித்தார் அதில் பிரதானமானது பிரம்ம சூத்திரத்திற்கு எழுதிய விளக்க உரை. இதற்கு ஆதிசங்கரர் விளக்கம் எழுதி இருக்கிறார் அதற்கு “சங்கர பாஷ்யம்’’ என்று பெயர். துவைத பரமாக ஸ்ரீ மத்வாச்சாரியார் விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால், ஸ்ரீ ராமானுஜர் போதாயன விருத்தி உரையை அனுசரித்தும் ஆழ்வார்களின் திருவாக்கின் அடிப்படையிலும் ஒரு பேருரை வரைந்தார் அதற்கு “ஸ்ரீ பாஷ்யம்’’ என்று பெயர் ராமானுஜருக்கும் பாஷ்யகாரர் என்று பெயர்.

ஸ்ரீ சரஸ்வதி தேவியே உச்சிமேல் வைத்து கொண்டாடிய பேருரையாக இந்த உரை அமைந்தது. இது தவிர ராமானுஜர் இயற்றிய நூல்கள் கீதா பாஷ்யம் கத்ய திரையம் எனும் மூன்று நூல்கள் (சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுண்ட கத்யம்) வேதாந்த சங்க்ரஹம் வேதாந்த தீபம், வேதாந்த சாரம், கீதா பாஷ்யம், நிறைவாக பெருமாளுக்கு திருவாராதனம் செய்வது எப்படி என்பதற்காக நித்யம் என்ற கிரந்தத்தையும் அருளிச் செய்தார்.

29. ஸ்ரீராமானுஜரைப் பற்றிய நூல்கள்

ராமானுஜரைப் பற்றி அவருடைய சீடர்களும் பல நூல்களை இயற்றி இருக்கின்றார்கள். அத்தனையும் ஸ்ரீ ராமானுஜரின் பெருமையை கண்ணாடி போல் எடுத்துக் காட்டும். “ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம்’’, “பெரிய திருமுடி அடைவு’’, “ப்ரபந்நாம்ருதம்’’, “ராமானுஜ நூற்றந்தாதி’’, வடுகநம்பி இயற்றிய “யதிராஜ வைபவம்’’, “ராமானுஜார்ய திவ்ய சரிதை’’, “யதிராஜ விம்சதி’’, “ராமானுஜ நூற்றந்தாதி’’, “யதிராஜ சப்ததி’’, “தாடீபஞ்சகம்’’, “ஸ்ரீ ராமானுஜ சது: ஸ்லோகி’’ என நிறைய உண்டு. இடம் போதாது.

30. ராமானுஜரின் திருமேனிகள்

ஸ்ரீ ராமானுஜரின் திருமேனிகள் அனேகமாக எல்லா திருமால் ஆலயங்களிலும் நிச்சயமாக இருக்கும். ஆயினும் அவருடைய சிறப்பு பெற்ற திருமேனிகள் மூன்று.

1. தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், மைசூர்)

2. தானுகந்த திருமேனி (ஸ்ரீ பெரும்புதூர்)

3. தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)

எம்பெருமானின் பெருமையைக் குறித்துக் கூட ஒரு அளவில் பேசி நிறுத்திக் கொள்ளலாம். ஆனால், எம்பெருமானின் கருணையை விஞ்சிய ஸ்ரீ ராமானுஜரின் பெருமையைப் பேசுவதற்கு சொற்கள் போதாது. எனவே, இந்த அளவில் ஸ்ரீ ராமானுஜரின் வைபவத்தை நிறுத்தி, வேறொரு சந்தர்ப்பத்தில் இன்னும் நிறைய செய்திகளைப் பார்ப்போம்.

எஸ். கோகுலாச்சாரி

The post உலகம் உய்ய வந்த உத்தமர் ஸ்ரீ ராமானுஜர் appeared first on Dinakaran.

Related Stories: