புதுக்கோட்டை சந்தப்பேட்டை நகராட்சி பள்ளியில் சமத்துவ பொங்கல்

 

புதுக்கோட்டை,ஜன.12: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் பொங்கல் விழாவெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை சந்தப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நைனாமுகமது மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் பள்ளி மைதானத்தில் பெரிய பானையில் பொங்கல் வைத்தனர்.

இந்த விழாவிற்கு அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பாரம்பரிய உடையன பட்டுவேட்டி, பட்டு சட்டை, சேலை உள்ளிட்ட உடைகளை அணிந்து பள்ளிக்கு வருகை தந்தனர். மேலும் பள்ளி வளாகம் முழுவதும் தோரணங்கள் கட்டி அலங்காரங்கள் செய்து முஸ்லிம் கிறிஸ்டின் என அனைத்து மதத்தினரும் ஒன்றாக இணைந்து சாதி மத பேதமின்றி சமத்துவமாக பொங்கல் திருவிழாவை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மேலும் இதில் மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் மாணவ மாணவிகளுக்கு பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சுற்றுதல், பாண்டியாட்டம், கிச்சுகிச்சு தாம்பாலம், பம்பரம் சுற்றுதல், சதுரங்கம், கபாடி உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டுபோட்டிகளும் நடத்தப்பட்டது.

அதேபோல் பள்ளிகள் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. இதில் பெற்றோர்கள் பல்வேறு வகையான கோலங்கள் வரைந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட நிலையில் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

The post புதுக்கோட்டை சந்தப்பேட்டை நகராட்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் appeared first on Dinakaran.

Related Stories: