முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு

சென்னை: அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்க வந்த சிங்கப்பூர் நாட்டின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு 2 நாட்கள் நடைபெறும் “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவை நேற்று நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2வது நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி, ‘எனது கிராமம்’ என்ற முன்னோடி திட்டத்தை தொடங்கி வைத்து, சிறப்புரையாற்ற உள்ளார். இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொள்ள வந்துள்ள சிங்கப்பூர் நாட்டின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் நேற்று முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

சென்ற ஆண்டு சிங்கப்பூர் பயணத்தின்போது நான் விடுத்த அழைப்பை ஏற்று, அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டுக்கு வந்துள்ள சிங்கப்பூர் நாட்டின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகத்தை எனது இல்லத்தில் வரவேற்று மகிழ்ந்தேன். உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ன் வெற்றியை தொடர்ந்து நடைபெற்றுள்ள எங்களின் இந்த சந்திப்பு கல்வி – பண்பாடு – தொழில் என பல்வேறு தளங்களில் வளர்ந்து, நாட்டுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: