பாலக்காடு அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: வாழை மரங்களை சூறையாடியதால் பரபரப்பு

பாலக்காடு: பாலக்காடு அருகே தோட்டத்தில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டு யானைகள் அங்கிருந்த வாழை மரங்களை சூறையாடியது. பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அடுத்த மங்கலம் அணை சுற்றுவட்டார நேர்ச்சப்பாறை மலையடிவாரத்தில் 50க்கு மேற்பட்ட குடும்பத்தினர் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். கடந்த சிலநாட்களாக இப்பகுதியில் பீச்சி, வடக்கஞ்சேரி, மங்கலம் அணை சுற்றுவட்டார மலை பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டத்துடன் இடம்பெயர்ந்து தோட்டத்தில் பயிரிட்டிருந்த வாழை, தென்னை உள்ளிட்டவைகளை தின்று சேதப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் சஜூ என்பவரது வீடு அருகே காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதை பார்த்த சஜூ குடும்பத்தினர், அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்து உயிர்தப்பினர். மேலும் போபின் என்பவரது வீடு முன்பு வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் குடிநீர் தொட்டியை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து சென்ற காட்டு யானைகள் சாஜூ என்பவரது தோட்டத்தில் புகுந்து அங்கு குலை தள்ளியிருந்த வாழை மரங்களை தின்று சூறையாடியது. இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் அணை மற்றும் நெம்மாரா வன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பட்டாசு வெடித்து யானைகளை விரட்டி அடித்தனர்.

காட்டு யானைகள் ஊருக்குள் புகாமல் தடுக்க சோலார் வேலி, அகழி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பாலக்காடு மாவட்ட கலெக்டர் மற்றும் நெம்மாரா வன அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதற்கிடையே சம்பவ இடத்தை ஆலத்தூர் எம்பி ரம்யா ஹரிதாஸ் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post பாலக்காடு அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: வாழை மரங்களை சூறையாடியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: