கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்; பல ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பழமையான பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி கடந்த டிசம்பர் 8ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி, இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

10 டன் விறகுகளால் 60 அடி நீளத்திற்கு தயாரிக்கப்பட்ட குண்டத்தில் அம்மை அழைத்தல், நந்தா தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து முதலில் கோவில் தலைமை பூசாரி ராமணந்தம் இறங்கினார். அதனை தொடர்ந்து சிறுவர்கள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கை குழந்தையுடன் பெண்கள் அக்கினி சட்டி ஏந்தியும், தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோபி சுற்றுவட்டார மக்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நேற்று முதலே பாரியூர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து வருகின்றனர்.

The post கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்; பல ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!! appeared first on Dinakaran.

Related Stories: