இருபது ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருப்புவனம்,ஜன.10: பூவந்தி அருகே திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2002-2003ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ,மாணவிகள் மீண்டும் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். திருமாஞ்சோலை அரசு பள்ளியில் திருமாஞ்சோலை, அரசனூர், ஏனாதி உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ,மாணவியர்கள் கல்வி படித்து வருகின்றனர். இதில் கடந்த 2002-2003ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் 47 பேர் மீண்டும் சந்திக்க ஏற்பாடு செய்தனர்.

முன்னாள் மாணவர் பாஸ்கரன் தலைமையில் வாட்சப் குழு ஆரம்பித்து அனைவரையும் தொடர்பு கொண்டு நேற்றுமுன் தினம் 20ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூடினர். மேலும் தங்களுக்கு கல்வி பயிற்று வித்த ஆசிரியர், ஆசிரியைகளையும் அழைத்து வந்து சால்வை அணிவித்து அனைவரும் ஆசி பெற்றனர். தாங்கள் கல்வி பயின்ற வகுப்பறையில் மீண்டும் அனைவரும் அமர்ந்து கணித ஆசிரியர் ஸ்டீபன் ஞானசேகரன் கணித பாடம் எடுக்க மாணவர்களின் குழந்தைகள், உறவினர்கள் அதனை கண்டு ரசித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவி பேச்சியம்மாள் கூறுகையில், 47 பேர் எங்கள் வகுப்பில் இருந்தோம். இதில் இருவர் காலமாகி விட்டனர். மீதமுள்ளவர்கள் சந்தித்துள்ளோம். 20 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள், அவசர யுகத்தில் இதுபோன்ற பள்ளி பருவ நிகழ்ச்சிகள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

ராஜேஸ்வரி கூறுகையில், நாங்கள் படிக்கும் போது அலைபேசி, இண்டெர்நெட் உள்ளிட்ட எதுவும் இல்லை. மகிழ்ச்சியுடன் துள்ளித் திரிந்த இந்த காலம் மீண்டும் வராதா என்று எண்ணிய நிலையில் இந்த சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கள் கூறுகையில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்று மட்டுமின்றி அரசு பள்ளிக்கு தேவையான உதவிகளைச் செய்யவும் முடிவு செய்துள்ளோம். இன்னும் ஒரு சில மாதங்களில் கட்டிட பணிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த உள்ளோம் என்றார்.

The post இருபது ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: