மதுரை அருகே கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு கலையரங்கத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

அலங்காநல்லூர்: ‘‘அலங்காநல்லூர் அருகே பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு கலையரங்கத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்’’ என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் ரூ.61 கோடி மதிப்பில் 66 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு கலையரங்க கட்டுமானப் பணி முடிவடைந்து, விரைவில் திறப்பு விழா காண உள்ளது. இந்த கலையரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் ஆகியோர் ஜல்லிக்கட்டு கலையரங்கத்தை இன்று ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அளவில் வீர விளையாட்டுக்கென தமிழ்நாட்டில் மட்டும்தான், கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தென்பகுதி மக்களின் பெருமையை, பாரம்பரியத்தை, வீரவிளையாட்டை நினைவுகூரும் வகையில் இந்த கலையரங்கம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தடைகளை நீக்குவதற்கு நீதிமன்றத்தில் தொடர் வழக்குகள் தொடுத்து அதற்கு நிரந்தர தீர்வு கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான். பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்பவும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும் இந்த கலையரங்கத்திற்கு தலைவர் கலைஞரின் பெயர் சூட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மதுரை அருகே கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு கலையரங்கத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: