கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51ஆக உயர்வு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் 17 பேர் வரையில் உயிரிழந்தனர்.

நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29-ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முற்பகலில் இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 36 என ஆனது. நேற்று மாலை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி ஏமத்தூரை சேர்ந்த சங்கர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 28 பேர், சேலம் மருத்துவமனையில் 16 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர் உயிரிழந்தனர். 87 பேருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The post கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: