திருப்பத்தூர் மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ₹50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது

*குவிண்டால் ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனை

*இந்த ஆண்டு ரூ.15 கோடி இலக்கு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. குவிண்டால் ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனையானது. மேலும் இந்த ஆண்டு ரூ.15 கோடிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இதில் ஆண்டுதோறும் பருத்தி ஏலம் நடைபெறும். இந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கந்திலி, வாலாஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி அறுவடை நேற்று செய்து 1500 மூட்டைகள் பருத்தி ஏலத்தில் வைக்கப்பட்டது.

இந்த ஏலத்தை மடப்பள்ளி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தேவராசன் நேற்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் திருப்பூர், சென்னிமலை, கோயம்புத்தூர், அவிநாசி, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நூல் மில் உரிமையாளர்கள் வந்து ஏலத்தை போட்டி போட்டு பருத்தி ஏலம் எடுத்தனர். இதில் ஒரு பருத்தி ஆர்சி எச்குவிண்டால் ரூ.8,400 முதல் ரூ.9 ஆயிரத்திற்கு ஏலம் போனது. மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம் நடைபெற்று உடனுக்குடன் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இதுகுறித்து மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்க தலைவர் தேவராசன் கூறியதாவது: தமிழகத்திலேயே இரண்டாவது பருத்தி மார்க்கெட் மாடப்பள்ளி பருத்தி மார்க்கெட் ஆகும். இங்கு மாவட்டத்தில் விளையும் பருத்திகள் அனைத்தும் மண்வளத்தினால் அதிக தரம் உள்ள பருத்திக்களாக உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து ஏராளமான பருத்திகள் நூல் மில்களுக்கு மற்றும் பல்வேறு அயல் நாடுகளுக்கும் சென்றடைகிறது. வருடம் தோறும் பருத்தி மார்க்கெட் ஏலம் நடைபெற்று வரும் இந்த ஆண்டு 44வது வருடம் தொடங்கப்பட்டு விவசாயிகளுக்காக இந்த சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மாடப்பள்ளி உழவர் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும். இந்த பருத்தி ஏலம் மார்க்கெட்டில் கடந்த ஆண்டு ரூ.9 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது. இந்த ஆண்டு ரூ.15 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்தி சாகுபடி தற்போது குறைந்துள்ளது. எனவே விவசாயிகள் நல்ல மகசூல் வரும் என்று நினைத்து பருத்தி பயிரிட்டனர். இருந்தாலும் திருப்பத்தூர் மாவட்டம் இல்லாமல் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் இந்த பகுதிக்கு பருத்தி வரத்து இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு ரூ.15 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கஷ்டப்பட்டு பருத்தி பயிரிட்டு அவர்களுடைய பருத்திகளை ஏலம் விட்டு உடனுக்குடன் அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.

மேலும் வரும் மார்ச் மாதம் வரை தொடர்ந்து வாரம் திங்கட்கிழமையும் பருத்தி ஏலம் வரும் 3 மாதங்கள் வரை நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த பருத்தி ஏலத்தில் கூட்டுறவு சங்க செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் தலைவர் சாமி கண்ணு, ஒன்றிய கவுன்சிலர் ரகு, கஸ்தூரி முன்னாள் தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பத்தூர் மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ₹50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது appeared first on Dinakaran.

Related Stories: