தேர்தலை முறையாக நடத்த கோரி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

 

சீர்காழி,ஜன.9: பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலை முறையாக நடத்த கோரி சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் அல்லி வளாகம், அண்ணன் பெருமாள் கோவில், குச்சிபாளையம், ராதாநல்லூர், நாராயணபுரம், மங்கைமடம், திருவாலி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் தேர்வில் பெற்றோர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் நேற்று பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை பள்ளியில் நடத்த இருந்தனர்.ஆனால் நேற்று மழை காரணமாக மாவட்ட கலெக்டர் மகாபாரதியின் உத்தரவின் பேரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே நாங்கூர் கிராம பொது நல சங்கம் சார்பில் நேற்று மதியம் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் தேர்தலை உரிய அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளிப்படை தன்மையுடன் நடத்திட வலியுறுத்தி பள்ளி முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொது நல சங்கத் தலைவர் விஆர்ஏ அன்பு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் பெற்றோர்கள் ஆலோசனையின் பேரில் பெற்றோர்கள் ஆசிரியர் கழக தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், மூவேந்தர் முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் ராஜு, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை மையத்தின் தலைவர் ராமச்சந்திரன் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தேர்தலை முறையாக நடத்த கோரி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: