சென்னை ரன்னர்ஸ் சார்பில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 20,000 பேர் பங்கேற்பு

சென்னை: சென்னை ரன்னர்ஸ் சார்பில் நேற்று நடந்த மாரத்தான் ஓட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சென்னை ரன்னர்ஸ் சார்பில் மாரத்தான் ஓட்டம் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மற்றும் நேப்பியர் பாலத்தில் இருந்து துவங்கியது. இந்த மாரத்தான் ஓட்டம் 10 கி.மீ, 21 கி.மீ, 32 கி.மீ, மற்றும் 42 கி.மீ தொலைவுகளில் நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 12வது ஆண்டாக நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தை சென்னை பெசன்ட் நகரில் இருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அதேபோல, நேப்பியர் பாலத்தில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த மாரத்தான் ஓட்டத்தின் மூலம் பெறப்படும் நிதி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் சென்னை மாநகரம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரம் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் மாரத்தான் ஓட்டத்தில் 35 சதவீதம் பெண்கள் பங்கேற்றனர். மாரத்தான் ஓட்டத்திற்காக ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாந்தோம் நெடுஞ்சாலை, டாக்டர் டி.ஜி.எஸ் தினகரன் சாலை வழியாக ஓஎம்ஆர், இசிஆர் வழியாக முட்டுக்காடு மற்றும் உத்தண்டி வரை சென்று மாரத்தான் நிறைவடைந்தது.

இதனால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் சில இடங்களில் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். மாரத்தான் குறித்து சென்னை ரன்னர்ஸ் இயக்குனர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த மாரத்தான் ஓட்டம் 12வது ஆண்டாக நடத்தப்படுகிறது. இதில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முதல் முறையாக சனிக்கிழமை மாரத்தான் ஓட்டத்தை நடத்தி இருக்கிறோம். இதனால் சென்னை மாநகருக்கு பெருமை சேர்த்து இருக்கிறோம். இந்த மாரத்தான் ஓட்டத்தின் மூலம் பெறப்படும் நிதி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. மாரத்தான் ஓட்டத்திற்கு உதவியாக இருந்த காவல்துறை, சென்னை மாநகராட்சி என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றார்.

* மெட்ரோ ரயில்களில் இலவச பயணம்
சென்னை மாரத்தானை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. மாரத்தான் போட்டியில் பங்கேற்க்கும் பயணிகள் சிறப்பு கியூ (QR) குறியீடு பயண அட்டையை பயன்படுத்தி நேற்று மட்டும் கட்டணமின்றி பயணம் செய்தனர். மேலும் வாகன நிறுத்துமிடத்தில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்திக்கொண்டனர்.

The post சென்னை ரன்னர்ஸ் சார்பில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 20,000 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: