ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தினரும் பாஜவுக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்: முதல்வரை சந்தித்த பின் காதர்மொகிதீன் பேட்டி

சென்னை: ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தினரும் ஒருபோதும் பாஜவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று காதர் மொகிதீன் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேற்று சந்தித்தார்.

அவருடன் தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வஹாப் எம்.பி., தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், முதன்மை துணைத்தலைவரும், வக்பு வாரிய தலைவருமான எம்.அப்துல் ரஹ்மான், துணைத்தலைவர் கே.நவாஸ்கனி எம்.பி., கேரள மாநில இளைஞர் அணி தலைவர் செய்யது முனவர் அலி சிஹாப் தங்கள், மாணவரணி தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச்.முஹம்மது அர்ஷத் ஆகியோரும் முதல்வரை சந்தித்து பேசினர்.

அப்போது வெள்ள நிவாரண நிதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கினர். பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வருகிற 21ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரை மைதானத்தில் நடைபெறும் மண்டல மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளை பங்கேற்க செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தொடர்ந்து கே.எம்.காதர் மொகிதீன் அளித்த பேட்டியில், ‘‘முஸ்லிம் அமைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றும் சில அறிவிப்புகள் செய்யலாமே தவிர, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தினரும் ஒருபோதும் பாஜவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது தான் திட்டமான முடிவு. அதில் எந்த மாற்றமும் இருக்காது. ராமநாதபுரம் தொகுதியை முன்பு ஒதுக்கியது போல இந்த தேர்தலிலும் ஒதுக்குவார்கள் என்று நம்புகிறோம். ராமநாதபுரத்தில் பாஜ சார்பில் எந்த பிரபலங்களை நிறுத்தினாலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மேலும் ஒரு தொகுதியையும் கேட்போம்” என்றார்.

The post ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தினரும் பாஜவுக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்: முதல்வரை சந்தித்த பின் காதர்மொகிதீன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: