சிவில் நீதிபதி பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சிவில் நீதிபதி பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பதவிகள் அடங்கிய 245 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 3 ஆண்டுக்கு பிறகு இந்த போட்டி தேர்வை நடத்தியது. இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆகஸ்ட் 19ல் நடந்தது. இத்தேர்வை 12,037 பேர் எழுதினர். தொடர்ந்து அக்டோபர் 11ல் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது.

அதில் முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) எழுத தற்காலிகமாக 2,544 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் முதன்மை தேர்வு எழுத 18 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) எழுத 2,526 பேர் தகுதி பெற்றனர். இதில் ஆண்கள் 1191 பேர், பெண்கள் 1334 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். இவர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு(மெயின் தேர்வு) கடந்த நவம்பர் 4 மற்றும் 5ம் தேதி நடந்தது.

இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அனுமதிக்கப்பட்டனர். தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. நேர்முக தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலை பணியில் அடங்கிய பதவியில் (நேர்முக பதவி) காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதி கணினி வழித் தேர்வு நடந்தது. இதில் 6 பேர் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேர்முக தேர்வு வரும் 22ம் தேதி நடைபெறும். இத்தகவலை டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

The post சிவில் நீதிபதி பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: