திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி வறண்ட ஏரிகளுக்கு கோடை மழை கை கொடுக்குமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளன. இவைகளுக்கு கோடைமழை கைகொடுக்குமா என விவசாயிகள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், விவசாயத்தை நம்பியிருக்கிறது. மாவட்டத்திலுள்ள அணைகள், ஏரிகள், கிணறுகள் நிரம்பினால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும். கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த பருவ மழையால் அணைகள், ஏரிகள் மற்றும் கிணறுகள் ஓரளவு நிரம்பின.

ஆனால், கடந்த இரண்டு மாதமாக சுட்டெரித்த கோடை வெயிலால் பெருமளவு நீர் இழப்பு ஏற்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது. அணைகள் ஏரிகள் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக சரிந்துவிட்டன. குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நீரின்றி வறண்டு விட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 670 ஏரிகளில் 490 ஏரிகள் தற்போது நீரின்றி வறண்டு காணப்படுகிறது. சாத்தனூர் அணை பகுதியில் உள்ள ஒரு சில ஏரிகளை தவிர, மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகளில் தண்ணீர் இல்லை. அதேபோல், ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் நீரின்றி வறண்டு விட்டன.

இந்த மாவட்டத்தின் பிரதான சாகுபடி பயிர்கள் நெல், மணிலா, கரும்பு மற்றும் தோட்டப்பயிர்கள். மானாவரி மணிலா தவிர, மற்ற பயிர்களுக்கு தண்ணீர் தேவை அதிகம். எனவே, நெல் மற்றும் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் பெரும்பாலும் ஆற்றுநீர் பாசனம் சார்ந்த விவசாயம் நடக்கிறது. ஆனால், வட மாவட்டங்களில், அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம் குறைவு. ஏரிகள் மற்றும் கிணறுகள் மட்டுமே விவசாயத்தை வாழவைக்கும் நீராதாரங்கள். எனவே, இந்த மாவட்டத்திற்கு ஏரிகளின் மாவட்டம் எனும் சிறப்பும் உண்டு. ஆனால், தற்போது ஏரிகள் நீரின்றி வறண்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீரை வெகுவாக உறுஞ்சும் தன்மைகொண்ட கருவேல முள்மரங்கள், பெரும்பாலான ஏரிகளில் அடர்ந்து வளர்ந்திருக்கிறது. எனவே, ஏரிகளின் நிலத்தடி தன்மையே முற்றிலும் மாறியிருக்கிறது. கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த கோடை மழை, வெப்பத்தை தணிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறது. ஏரிகள், கிணறுகள் போன்ற நீர்நிலைகள் நிரம்புவதற்கான அளவில் பயனுள்ளதாக இல்லை. எனவே மேலும் கோடை மழை பெய்து கைகொடுக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரிகளில் கூட குறைந்தபட்ச அளவு தண்ணீரும் இல்லை. இதனால், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளின் நிலையும் திண்டாட்டமாகிவிட்டது. எனவே, ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். கோடையில் பெய்யும் மழை, வீணாகாமல் தடுத்து, அதனை நீர்நிலைகளுக்கு கொண்டு சேர்க்கும் கடமை மாவட்ட நிர்வாகத்துக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் உண்டு. அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறினால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய தவிப்புக்குள்ளாவது தவிர்க்க முடியாததாக மாறிவிடும்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி வறண்ட ஏரிகளுக்கு கோடை மழை கை கொடுக்குமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: