கடும் குளிர், மழையிலும் வெள்ளிங்கிரி மலையில் பக்தர்கள் குவிந்தனர்

தொண்டாமுத்தூர்: கோவையை அடுத்த பூண்டி மலையடிவாரத்தில் இருந்து சுமார் 5.5 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது வெள்ளிங்கிரி மலை. ஆண்டுதோறும் இந்த மலை மீது லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறிச் சென்று மலை உச்சியில் வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வருகின்றனர். வனத்துறை அனுமதியோடு கோடை காலம் துவங்கும் போது கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையேறி கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதி முதல் வனத்துறை அனுமதியோடு பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.

மகா சிவராத்திரி, மாசி மாத பெளர்ணமி, அமாவாசை,பிரதோஷம், பங்குனி உத்திரம், சித்திரைக்கனி என விசேஷ நாட்களில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்து வந்தது. இதுதவிர அரசு விடுமுறை, வார விடுமுறை தினங்களில் வெளியூர் பக்தர்களின் வரத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. மலையடிவாரத்தில் பக்தர்கள் எளிதாக மலையேறி சிவனை தரிசனம் செய்வதற்காக ரூ.30-க்கு மூங்கில் தடிகளை வழங்கி வந்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள், பீடி, சிகரெட் போன்றவற்றிற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். குடிதண்ணீர் பாட்டிலுக்கு ரூ.20 வசூலித்து ஸ்டிக்கர் ஒட்டியதோடு, சாமி தரிசனம் முடித்து திரும்புகையில் பக்தர்கள் பாட்டிலை ஒப்படைத்து ரூ.20 திரும்ப பெறவும் வழி வகை செய்திருந்தனர்.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் சுயம்பு வடிவிலான வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் பலரும் அன்னதானம் அளித்து வருகின்றனர். வெள்ளை விநாயகர் கோயில்,வழுக்குப்பாறை, கைதட்டி சுனை, பாம்பாட்டி சுனை, ஒட்டர் சமாதி, பீமன் களி உருண்டை, திருநீற்று மலை, சுவாமி முடிமலை என ஒவ்வொரு மலையாக 7 மலைகளை கடந்து சென்று இறைவனை வழிபட நாள்தோறும் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 3 மாதமாக கடும் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் மலையேறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து விட்டு திரும்பி உள்ளனர்.

மூச்சுத்திணறல் காரணமாக நடப்பாண்டில் சுமார் 8 பேர் வெள்ளிங்கிரி மலை மீது உயிரிழந்துள்ளதால், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் மலையேற்றத்தை தவிர்க்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கயிலாயம் என போற்றப்படக்கூடிய வெள்ளிங்கிரி மலை மீது ஏறுவதற்கான அனுமதி மே மாத இறுதியுடன் நிறைவடைந்து விடும் என்பதால் நேற்று வெளி மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூண்டி மலையடி வாரத்தில் குவிந்தனர். கடந்த 4 நாட்களாக மலையில் கன மழை, கடும் குளிர் நீடிக்கிறது. இருப்பினும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதாலும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

The post கடும் குளிர், மழையிலும் வெள்ளிங்கிரி மலையில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: