இந்த நிதியாண்டில் ஒரு ரூபாய்கூட ஒதுக்காத ஒன்றிய பாஜ அரசு: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நாட்டிலேயே மிக குறைந்த நிதி ஒதுக்கீடு; ஒன்றிய அமைச்சர் விளக்கம்; தமிழக மக்களை வஞ்சித்தது அம்பலம்

* சிறப்பு செய்தி
நாட்டிலேயே மிகக் குறைந்த நிதியை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய பாஜ அரசு ஒதுக்கியதும், இந்த நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் தமிழக மக்களை வஞ்சித்ததும் ஒன்றிய அமைச்சர் அளித்த விளக்கம் மூலம் அம்பலமாகியுள்ளது. இது தமிழக மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தென்சென்னையிலிருந்து வடசென்னைக்கோ, வடசென்னையிலிருந்து தென்சென்னைக்கோ குறைந்தபட்சம் இரண்டு, மூன்று பேருந்துகள் அல்லது ஷேர் ஆட்டோக்கள் மூலம் தான் சென்றடைய வேண்டும். நேர விரயம், போக்குவரத்து நெரிசல் என மனஉளைச்சல் கொண்ட அந்த பயணம் பலருக்கும் அலுப்பூட்டிவிடுவதாக மட்டுமல்லாமல் கடுமையான அலைச்சலையும் தந்தது. எனவே, இந்த போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த 2007ல், முதல்வராக இருந்த கலைஞர் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தார்.

அப்போது, இந்திய அளவில் கொல்கத்தாவும், டெல்லியும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கத்தில் முன்னோடி நகரங்களாக இருந்தன. இந்த நகரங்களின் வேகமான வளர்ச்சியில் சென்னை பின் தங்கி விடக்கூடாது என்ற காரணத்தால் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்க வேண்டும் என்பதில் முதல்வராக இருந்த கலைஞர் உறுதியாக இருந்தார். அவரது முழு முயற்சியால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் வேகமாக தொடங்கியது.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநில தலைநகரங்களில் மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015 முதல் இயக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் 42 மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் இதன் மூலம் 2 லட்சம் முதல் 3 லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான் சென்னை மக்களின் அன்றாட தேவைக்கு அத்தியாவசியமாக மாறி இருக்கிறது மெட்ரோ ரயில் பயணம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏறினால், குறிப்பிட்ட நேரத்தில் எந்தவிதமான தங்கு தடையும் இல்லாமல் மிக வசதியாகப் போய் சேர முடியும் என்பது இதன் சிறப்பு. ஆகவே மக்கள் அனைவரும் அதிகம் இந்த பயணத்தை விரும்பி மேற்கொண்டு வருகின்றனர். சென்னையின் மொத்தத்தையும் ஊடுருவி செல்லும் மெட்ரோ ரயிலின் கட்டுமானங்கள் தொடர்ந்து வளர்ந்த வண்ணமே இருக்கின்றன. சென்னை போன்ற வளர்ந்து வரும் நகரத்துக்கு மெட்ரோ ரயில் கட்டுமானம் என்பது, சில ஆண்டுகளில் முடிந்துவிடும் திட்டமல்ல. நகரத்தின் தேவைக்கேற்ப வளர்ந்துகொண்டே செல்லும் திட்டமாகும்.

இந்நிலையில், ஒன்றிய பாஜ அரசு நாட்டிலேயே மிகக் குறைந்த நிதியை தமிழ்நாடு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி, தமிழ்நாட்டை வஞ்சித்து வருவது மக்களவையில் தரப்பட்ட தகவல் மூலம் இப்போது அம்பலமாகி உள்ளது. இந்த தகவல் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் சேவையானது மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நிதி ஆதாரம் மூலம் செயல்பட்டு வந்தாலும், இதில் பெரும் பங்கு நிதி ஒன்றிய அரசின் மூலமே ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 6 ஆண்டுகளில், அதாவது 2018-19 நிதியாண்டு முதல் நடப்பு நிதியாண்டு வரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பது குறித்த அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் கஜனன் கீர்த்திகர் மற்றும் ஸ்ரீ கிருபால் பாலாஜி துமனே ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். அவரது அறிக்கையின்படி, ‘நாட்டிலேயே தமிழ்நாட்டில் இயங்கிவரும் சென்னை மெட்ரோ ரயில் சேவைக்குத் தான் மிகக் குறைந்த அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘‘மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2018-19 முதல் 2023-24 வரையான நிதியாண்டில் ரூ.28,493 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.17,532 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

டெல்லி- உத்தரபிரதேச மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மட்டும் இந்த நிதியாண்டுகளில் ரூ.16,189 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. டெல்லி, உத்தரபிரசேதம், அரியானா மெட்ரோ ரயில் பணிகளுக்காக ரூ.13,424 கோடியையும், மேற்குவங்கம் கொல்கத்தா மெட்ரோ ரயில் பணிகளுக்காக ரூ.13,109 கோடியையும் ஒதுக்கியுள்ளது. இந்த வரிசையில் குஜராத் மாநில மெட்ரோவுக்கு ரூ.12,867 கோடி, உத்தரபிரதேச மெட்ரோவுக்கு ரூ.11,565 கோடி, மத்தியபிரதேச மெட்ரோவுக்கு ரூ.3,779 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இயங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இந்த 6 ஆண்டுகளில் வெறும் ரூ.3,273 கோடியை மட்டுமே இதுவரை ஒதுக்கியுள்ள தகவல் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி மூலம் தெரியவந்துள்ளது.

இந்த தகவல் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2023-24 நிதியாண்டுகளில் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட இந்த திட்டத்துக்கு ஒதுக்கவில்லை என்ற உண்மை இப்போது அம்பலமாகி உள்ளது.  ஏற்கனவே, ஒதுக்கிய நிதியும் நாட்டிலேயே ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்டுள்ள மிகமிக சொற்ப தொகையாகும். இதிலிருந்து ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று திமுக முன்வைத்து வரும் குற்றச்சாட்டு நிஜம் என்று நிரூபணமாகி உள்ளதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் இந்த பாரபட்ச நடவடிக்கை தமிழக மக்கள் மத்தியில் ஒன்றிய பாஜ அரசு மீது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட ரூ.70 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இதில் இதுவரை ஒரு ரூபாயைக் கூட ஒன்றிய அரசு அளிக்கவில்லை. ஒட்டுமொத்த நிதியையும் தமிழ்நாடு அரசு பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து கடன் வாங்கியோ அல்லது சொந்த நிதியிலிருந்தோ செலவு செய்து வருகிறது. இந்திய அளவில் அதிக ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசுக்கு அளிக்கும் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு இருக்கிறது. ஆனால், அவ்வளவு வரியை தமிழ்நாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளும் ஒன்றிய அரசு, சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ஒரு பைசாகூட வழங்காமல் வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்?. இவ்வாறு அவர்கள் கூறினர். 2023-24 நிதியாண்டுகளில் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட இந்த திட்டத்துக்கு ஒதுக்கவில்லை என்ற உண்மை இப்போது அம்பலமாகி உள்ளது.

* மெட்ரோ ரயிலில் 25 கோடி பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் 2015-2018 வரை 2 கோடியே 80 லட்சத்து 52 ஆயிரத்து 357 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதேபோல், 2019ம் ஆண்டில் 3 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 628 பயணிகளும், 2020ம் ஆண்டில் 1 கோடியே 18 லட்சத்து 56 ஆயிரத்து 982 பயணிகளும், 2021ம் ஆண்டில் 2 கோடியே 53 லட்சத்து 3 ஆயிரத்து 383 பயணிகளும், 2022ம் ஆண்டில் 6 கோடியே 9 லட்சத்து 87 ஆயிரத்து 765 பயணிகளும் பயணித்துள்ளனர். 2023ம் ஆண்டு மட்டும் 9 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 957 பயணிகளும் பயணித்துள்ளனர். இவ்வாறு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய 2015 முதல் 2023 வரை மொத்தம் 25 கோடியே 1 லட்சத்து 17 ஆயிரத்து 72 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

* உத்தரபிரதேச மெட்ரோவுக்கு வாரி கொடுத்த ஒன்றிய அரசு
தமிழ்நாட்டில் மொத்தம் 54 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை இயங்கி வருகிறது. அதற்கு ஒன்றிய அரசு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.3,273 கோடியை வழங்கி உள்ளது. ஆனால், அதே நிதியாண்டில் குஜராத் மாநில மெட்ரோவுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள நிதி ரூ.12,867 கோடி. தமிழ்நாட்டில் மொத்த மெட்ரோ ரயில் நீளம் 54 கி.மீ., குஜராத்தின் மொத்த நீளம் வெறும் 39 கி.மீ., தான். அதைவிடக் குறைவான 32 கி.மீ., நீளமுடைய உத்தரபிரதேச மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.11,565 கோடியை வாரி கொடுத்துள்ளது என்ற தகவலும் ஒன்றிய அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இந்த நிதியாண்டில் ஒரு ரூபாய்கூட ஒதுக்காத ஒன்றிய பாஜ அரசு: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நாட்டிலேயே மிக குறைந்த நிதி ஒதுக்கீடு; ஒன்றிய அமைச்சர் விளக்கம்; தமிழக மக்களை வஞ்சித்தது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: