ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க அதிரடி திட்டம்; கார்கே, சோனியா, ராகுலை சந்திக்க சர்மிளா இன்று டெல்லி பயணம்: நாளை காங்கிரசில் இணைகிறார்

திருமலை: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா. இவர் ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியை தொடங்கி பாத யாத்திரை மேற்கொண்டு அம்மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருந்தார். ஆனால் வாக்குகள் பிரிவதை விரும்பாத சர்மிளா, தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். தேர்தலுக்கு முன்னதாகவே தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைய அவர் திட்டமிட்டார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், தெலங்கானா தேர்தலுக்கு பின்னர் இணைந்து கொள்ள அறிவுறுத்தியது.

அதற்கேற்ப சர்மிளா, தெலங்கானா சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். தனது பிரசாரத்தின்போது பிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகரராவை மட்டுமே குறி வைத்து பேசினார். அதற்கேற்ப தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற நிலையில் சர்மிளாவை காங்கிரசில் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி டெல்லிக்கு வந்து தங்களை சந்தித்து காங்கிரசில் இணையும்படி கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது.

இதனிடையே சர்மிளாவின் மகனுக்கு இன்னும் சில வாரங்களில் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்திற்கு சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை அழைக்க அவர் திட்டமிட்டுள்ளார். முன்னதாக நேற்று தனது தந்தை ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் நினைவிடம் உள்ள இடுபுலபாயாவுக்கு சென்ற சர்மிளா, அங்கு தனது மகனின் திருமண அழைப்பிதழை வைத்து வணங்கினார். இன்று காலை அவர் ஐதராபாத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சர்மிளாவை சந்திக்க மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் நாளை நேரம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சர்மிளா இன்றிரவு டெல்லியில் தங்கி நாளை அவர்களை சந்தித்து முறைப்படி காங்கிரசில் இணைய உள்ளார். அப்போது சர்மிளா, தனது மகனின் திருமண அழைப்பிதழை அவர்களுக்கு வழங்கி அழைப்பு விடுக்க உள்ளார்.

இதனிடையே காங்கிரசில் இணைய உள்ள சர்மிளாவுக்கு, விரைவில் ராஜ்யசபா சீட் வழங்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆந்திரா, தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை வழங்கவும் முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்மிளாவுடன் காங்கிரசில் இணைய உள்ள அவரது ஆதரவாளர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாம்.

இதுகுறித்து ஆந்திர மாநில மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், ‘ஒய்எஸ் சர்மிளா காங்கிரசில் இணைந்ததும், அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. சர்மிளா தனது மகனின் திருமண வேலைகளை முடித்ததும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபடுவார். ஆந்திராவில் அசுர பலத்துடன் இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரசை வீழ்த்த, அதே குடும்பத்தை சேர்ந்த சர்மிளாவால்தான் முடியும். எனவே வரும் தேர்தலில் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதி’ என்றார்.

ஜெகன்மோகன் கலக்கம்
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏற்கனவே 4 எம்எல்ஏக்கள் விலகி தெலுங்கு தேசம் கட்சியிலும், ஒரு எம்எல்சி ஜனசேனா கட்சியிலும் இணைந்துள்ளனர். இதேபோல் சீட் கொடுக்க மறுத்தால் பல அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும் அணி தாவ தயாராகி வருகின்றனர். ஒருபுறம் தனது கட்சிக்கு எதிராக சகோதரி சர்மிளா காங்கிரசில் இணைய உள்ளதாலும், மறுபுறம் தனது கட்சி அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு வாய்ப்பு தர மறுத்தால் அவர்கள் அணி தாவ தயாராகி வருவதாலும் முதல்வர் ஜெகன்மோகன் கலக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

The post ஆந்திராவில் ஆட்சியை பிடிக்க அதிரடி திட்டம்; கார்கே, சோனியா, ராகுலை சந்திக்க சர்மிளா இன்று டெல்லி பயணம்: நாளை காங்கிரசில் இணைகிறார் appeared first on Dinakaran.

Related Stories: