மக்களுடன் முதல்வர் முகாம்களில் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது 30 நாளில் தீர்வு கலெக்டர் உறுதி

நாகர்கோவில், ஜன. 3: அகஸ்தீஸ்வரம் வட்டம் தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட திருமண மண்டபத்தில் நேற்று (2.1.2024) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமினை மாவட்ட கலெக்டர் தர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து அரங்குகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டுக்குட்பட்ட அனைத்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு, மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தினை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

குமரி மாவட்டத்தில் 27.12.2023 முதல் 06.1.2024 வரை பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் புற நகர் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை பெற சிறப்பு முகாம்கள் அனைத்து வருவாய் வட்டங்களிலும் நடக்கிறது. மொத்தம் 78 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மக்களுடன் முதல்வர் முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 30 தினங்களுக்குள் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். அகஸ்தீஸ்வரம் தாசில்தார் கண்ணன், தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதா ராணி, துணைத்தலைவர் மாதவன், பேரூராட்சி செயல் அலுவலர் சந்தோஷ்குமார், கவுன்சிலர்கள் வீரபத்திரன் பிள்ளை, ஐயப்பன், ஆறுமுகம், கணேசன், எட்வர்ட் ராஜ், சரஸ்வதி, மாலினி, காஞ்சனா, மீனா, கவிதா, மணிகண்டன், சங்கரம்மாள், அனைத்து துறை அலுவலர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

The post மக்களுடன் முதல்வர் முகாம்களில் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது 30 நாளில் தீர்வு கலெக்டர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: