ஸ்ரீ ரங்கம் கோயிலில் இன்று நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த நம்பெருமாள்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ராப்பத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்மாழ்வார் மோட்சம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 12ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோயிலின் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் 2ம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை உற்சவர் நம்பெருாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடைபெற்றது. பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார்.

அதன்பின் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் இருவர் கொண்டு சென்று திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். பின்னர் வேதங்கள் முழங்க நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர். தொடர்ந்து நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் காலை 8 மணி முதல் 9 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி மூலஸ்தானம் சென்றடைந்தார். ெதாடர்ந்து இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை (புதன்) 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவையுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

 

The post ஸ்ரீ ரங்கம் கோயிலில் இன்று நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த நம்பெருமாள்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: