ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி: திரளானோர் பங்கேற்றனர்

நாகை: ஆங்கில புத்தாண்டு பிறப்ைபயொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இது கீழ்திசை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமை உடையது. கிறிஸ்தவ ஆலயங்களில் பசிலிக்கா என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து செல்வர். வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெறும்.

இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு நடத்துவர். அதன்படி 2024ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் நள்ளிரவு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை கூட்டம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மறைமாவட்ட பரிபாலகர் திருப்பலி மேடையில் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்றி 2024ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்ததாக அறிவித்தார். பின்னர் பவனியாக எடுத்து வரப்பட்ட விவிலியம் மறைமாவட்ட பரிபாலகரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது புதுவருட வாசகங்கள் அடங்கிய பைபிளை அங்கு கூடியிருந்த ஏராளமான மக்களிடம் தூக்கி காண்பித்து புத்தாண்டை வரவேற்பதாக அவர் அறிவித்தார்.

இதில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் அருட் தந்தையர்கள், அருட சகோதரிகள் கலந்துகொண்டனர். பின்னர் வாணவேடிக்கை நடந்தது. அதனைதொடர்ந்து தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து புத்தாண்டையொட்டி இன்று காலை பேராலயம் கீழ் கோயில், மேல் கோயில், விண்மீன் ஆலயங்களில் பல்வேறு மொழிகளில் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது.

The post ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி: திரளானோர் பங்கேற்றனர் appeared first on Dinakaran.

Related Stories: