மாமல்லபுரத்தில் கழிப்பறை பற்றாக்குறையால் சுற்றுலா பயணிகள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

மாமல்லபுரம், ஜன.1: மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள், ஆதிபராசக்தி கோயில் பக்தர்கள் பயன்படுத்த போதிய கழிப்பறைகள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க அக்டோபர் முதல் மார்ச் வரை 6 மாதங்கள் சீசன் காலம் என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதில், குறிப்பாக ஆண்டு இறுதியான டிசம்பர் மாதம் மாமல்லபுரத்தில் நடக்கும் நாட்டிய விழா மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர்.

மேலும், வெளிநாட்டு பயணிகளுக்கு நிகராக கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுராந்தகம் ஆதிபராசக்தி கோயிலுக்கு சிவப்பு மாலையை கழுத்தில் அணிந்து ஏராளமான பக்தர்கள் வந்து குவிகின்றனர். அதேபோல், இந்தாண்டும் உள்நாட்டு பயணிகள், வெளிநாட்டு பயணிகள் மற்றும் ஆதிபராசக்தி கோயில் பக்தர்கள் பலர் மாமல்லபுரத்தில் குவிந்து வருகின்றனர். இதனால், மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு தெருக்களில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்படுகிறது.

மேலும், சுற்றுலா பயணிகள் மற்றும் ஆதிபராசக்தி கோயில் பக்தர்கள் பயன்படுத்த பேருந்து நிலையம், கடற்கரை கோயில் செல்லும் வழி, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த கழிப்பறைகளே உள்ளதால், பயணிகள் மற்றும் கோயில் பக்தர்கள் உடை மாற்றவும், இயற்கை உபாதைகளை கழிக்க நீண்ட நேரம் சாலையில் வரிசை கட்டி நிற்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மேலும், அங்கு வரிசையில் நிற்கும் போது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆதிபராசக்தி கோயில் பக்தருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டும், வாய் தகராறாக மாறியும் இறுதியாக அடிதடியில் முடிகிறது. இயற்கை உபாதைகளை கழிக்க நிற்பவர்கள் சாலையை மறித்து நிற்பதால் கடற்கரை கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆதிபராசக்தி கோயில் பக்தர்கள் நலன் கருதி மாமல்லபுரத்தில் ஆங்காங்கே போதிய கூடுதல் கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரத்தில் கழிப்பறை பற்றாக்குறையால் சுற்றுலா பயணிகள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: