மாமல்லபுரம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி: டிஎஸ்பி பங்கேற்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாமல்லபுரம் காவல் உட்கோட்டத்தில் மாமல்லபுரம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், டிராபிக் காவல் நிலையம், திருக்கழுக்குன்றம், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், கூவத்தூர், மானாம்பதி, திருப்போரூர் மற்றும் காயார் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. இதில், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், சிறப்பு எஸ்ஐக்கள், தலைமை காவலர்கள், முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் என 150க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

போலீசாருக்கு 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கேப், லத்தி, ஷூ, சீருடை, ஸ்டார், துப்பாக்கி, ரெயின் கோட் ஆகியவைகளும், ஆண்டுக்கு ஒரு முறை அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட 150க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற அணிவகுப்பு ஒத்திகை பூஞ்சேரி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நேற்று நடந்தது.

அணிவகுப்பு ஒத்திகையில், மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் கலந்து கொண்டு, போலீசாருக்கு வழங்கப்படும் கேப், ஷூ, பெல்ட், லத்தி, சீருடை, ஸ்டார், துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக பராமரிக்கின்றனரா, மருத்துவ பரிசோதனை செய்யும் சீட்டுகளை வைத்துள்ளனரா, அடையாள அட்டை வைத்துள்ளார்களா எனவும், காவல் நிலையங்களில் உள்ள வழக்கு பதிவேடுகள், காவலர்களின் வருகை பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, சிறப்பாக அணிவகுப்பு செய்த காவலர்கள் மற்றும் பல்வேறு பொருட்களை பராமரித்த காவலர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, பொதுமக்களிடம் கணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வருபவர்களை உட்கார வைத்து, அவர்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

The post மாமல்லபுரம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி: டிஎஸ்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: