ஆக்கிரமிப்பில் இருந்த ₹250 கோடி வக்பு வாரிய சொத்துக்கள் மீட்பு வேலூரில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி தமிழ்நாடு முழுவதும்

வேலூர், டிச. 29: தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த ₹250 கோடி வக்பு வாரிய சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக வேலூரில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். வேலூர் சரகத்தில் திருப்பத்தூர், கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள 21 பள்ளிவாசல் பராமரிப்புக்காக மானியம் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் சாயிநாதபுரத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்எல்ஏக்கள் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லத்தம்பி முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு ₹1 கோடியே 24 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கி பேசியதாவது:

இந்த நிகழ்ச்சியில் பள்ளிவாசல்கள் சீரமைக்க காசோலை வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 134 பள்ளிவாசல்கள் சீரமைக்க ₹10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ₹7 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தர்காவிற்கும் ₹6 கோடி ரூபாய் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ₹2 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. உலாமாக்கள் நல வாரியம் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின எழை, எளிய பெண்களுக்கு ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த மாதம் 2,500 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் 5 ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடக்க ஸ்தலம் என்பது முக்கியமானதாகும். எனவே அதற்கான இடத்தை தேர்வு செய்து தெரிவித்தால், இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்பகுதிகளில் வீடற்ற சிறுபான்மையின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஏக்கர் ₹15 லட்சத்தை பெற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓய்வு பெற்ற உலாமாக்களின் மனைவிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கான முடிந்த உதவியை நீங்கள் செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், நாம் தமிழகத்தில் எவ்வாறு ஒற்றுமையாக இருக்கிறோமோ, அதேபோல ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. ஆனால் சிலர் ஒற்றுமையில் வேற்றுமை காண முயற்சிக்கின்றனர்.

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடலின் ஆட்சி. அதைத்தான் தமிழக முதல் அமைச்சர் செய்து வருகிறார். இந்தியாவில் சிறுபான்மையின மக்களை பாதுகாக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாளை நமதே நாற்பதும் நமதே. 40 தொகுதியிலும் வெற்றியை கைப்பற்ற வேண்டும். சிறுபான்மையின மக்களுக்கு திராவிட மாடல் ஆட்சி தான் அரணாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறுகையில், ‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படுகிறது. அதன்படி பொங்கல் பண்டிகை முடிந்து அடுத்த கட்டமாக 3,500 வீடுகள் வழங்குவதற்கு அடிக்கல் நாட்டப்படும். தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த ₹250 கோடி வக்பு வாரிய சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது’ என்றார். நிகழ்ச்சியில் ஆர்டிஓ கவிதா, தாசில்தார் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆக்கிரமிப்பில் இருந்த ₹250 கோடி வக்பு வாரிய சொத்துக்கள் மீட்பு வேலூரில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி தமிழ்நாடு முழுவதும் appeared first on Dinakaran.

Related Stories: