அரசு அருங்காட்சியகத்தில் 700 ஆண்டு பழமையான நடுகல் காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகொத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த குதிரைப் குத்திபட்டான் நடுகல் அரசு அருங்காட்சியத்தில் காட்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: போசள மன்னன் வீர ராமநாதனின் ஆட்சியின் போது குந்தாணி என்ற பெயரில் தலைநகராக இருந்தது இந்த சின்னக்கொத்தூர் கிராமம். அப்போது நடந்த பல்வேறு சண்டைகளில் இறந்த வீரர்களுக்காக, பத்துக்கும் மேற்பட்ட நடுகற்கள் அங்குள்ள குந்தாணியம்மன் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. சுமார் 700 ஆண்டு பாமைவாய்ந்த குதிரைக் குத்திப்பட்டான் கல் அங்கிருந்து கொண்டு வரப்பட்டு தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நடுகல்லில் வீரன் ஒருவன் வலக்கை மேலே தூக்கிய நிலையில், குத்து வாளால் குதிரையைக் குத்தும் நிலையில் காட்டப்பட்டுள்ளான். குதிரையின் மீது அமர்ந்துள்ள வீரன் இவனை ஈட்டியால் குத்துவது போல் காட்டப்பட்டுள்ளது. சிற்பத்திற்கு மேலே நான்கு வரிகளில் தமிழ்க் கல்வெட்டு காணப்படுகிறது. சொக்கன் என்பவன் கருவாயன்பள்ளி என்ற ஊரில் நடந்த பூசலில் ஈடுபட்டுக் குதிரையைக் குத்தி இறந்துள்ளான் என்ற செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. நடுகற்களில், புலிக்குத்திப்பட்டான், மான்குத்திப்பட்டான், யானைக்குத்திப்பட்டான், பன்றிக்குத்திப்பட்டான், பாம்புக்குத்திப்பட்டான் என்று பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் இந்த குதிரைக்குத்திப்பட்டான் நடுகல். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசு அருங்காட்சியகத்தில் 700 ஆண்டு பழமையான நடுகல் காட்சிக்கு வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: