பேரணாம்பட்டு அருகே செயல்படும் ஆட்டு இறைச்சி கூட கழிவுகளால் சுகாதார சீர்கேடு

*நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை

பேரணாம்பட்டு : பேரணாம்பட்டு அருகே செயல்படும் ஆட்டு இறைச்சி கூட கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரணாம்பட்டு அடுத்த தரைக்காடு பகுதியில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான ஆட்டு இறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் பராமரிப்பின்றி முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருகிறது.

தினமும் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்து அதனை வெட்டி இறைச்சியாக்கி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அங்கு கழிவுகள் அதிகம் சேர்ந்து அகற்றப்படாமல் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும், கட்டிடத்திற்கு வழங்கப்படும் மின் இணைப்பு தாழ்வாக செல்வதால் அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சி கூடத்தை முறையாக பராமரித்து, தினமும் சேரும் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும், கட்டிடத்திற்கு தாழ்வாக செல்லும் மின் ஒயரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பேரணாம்பட்டு அருகே செயல்படும் ஆட்டு இறைச்சி கூட கழிவுகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Related Stories: