ஆறுமுகநேரி, காயல்பட்டினத்தில் கனமழையால் பரிதாபம் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலி

ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிகளில் கனமழை காரணமாக தனியார் கம்பெனி ஊழியர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்த அடைக்கலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சேகர் அமல்ராஜின் மகன் பால்பின் ராஜ் (26). கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆறுமுகநேரி சாகுபுரம் தனியார் கம்பெனியில் பணியாளராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 17ம் தேதி கனமழை தொடங்கிய நிலையில் கம்பெனிக்கு வேலைக்கு சென்றார்.

இந்நிலையில் கனமழையின் காரணமாக ஆறுமுகநேரி சுற்று வட்டார பகுதியில் உள்ள குளங்கள் உடைப்பு ஏற்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளம் கடந்த 3 நாட்களாக தனியார் கம்பெனியும் நீருக்குள் மூழ்கியது. இதனால் 17ம் தேதி பணிக்கு சென்றவர்கள் அனைவரும் கம்பெனிக்குள் பாதுகாப்பாக இருந்து வந்தனர். இதனையடுத்து இப்பகுதியில் மின்சாரம் மற்றும் தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டது.

இதனால் வீட்டிற்கும் தொடர்பு கொள்ள முடியாமல் பால்பின் ராஜ் உள்ளிட்ட சிலர் கடந்த 19ம் தேதி கம்பெனியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக கம்பெனிக்கு பின்புறம் உள்ள உப்பளம் வழியாக சென்றுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் சிலர் வெளியே வந்த நிலையில் பால்பின்ராஜ் கரைக்கு வரவில்லை என்பது தெரிந்தது. அதனைத் தொடர்ந்து 12 பேர் கொண்ட மீட்பு குழுவினர் படகு மூலம் பால்பின் ராஜை கம்பெனிக்கு பின்புறம் உள்ள பகுதிகளில் தேடினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பால்பின் ராஜ் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆறுமுகநேரி காணியாளர் தெரு கிழக்கு பகுதியைச் சேர்ந்த பால் லிங்கம் மனைவி செல்வி (53). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் தனது சகோதரி செல்லம்மாள் குடும்பத்தினருடன் வீட்டில் தனி அறையில் வசித்து வந்தார். ஏற்கனவே செல்வி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 17ம் தேதி பெய்த மழையால் வீட்டிற்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. செல்வி இருந்த அறையில் கட்டில் அளவிற்கு மேலாக தண்ணீர் வந்ததால் கீழே இறங்க முயற்சித்த போது தடுமாறி விழுந்து நீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபோல் காயல்பட்டினம் பகுதியில் கடந்த 19ம் தேதி 35 வயது மதிக்கத்தக்க வட மாநிலத்தைச் சேர்ந்த ஆண் சடலம் தனியார் சிமென்ட் பிரிக்ஸ் ஒர்க் கம்பெனிக்கு அருகில் வெள்ள நீரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் வெள்ளம் பாதித்த பிற பகுதிகளிலும் வெள்ளத்தால் யாரேனும் பலியாகியிருக்கின்றனரா என வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஆறுமுகநேரி, காயல்பட்டினத்தில் கனமழையால் பரிதாபம் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: