ஏழுமலையான் கோயிலில் வரும் 23ம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 23ம் தேதி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் அதிகாலை 1.45 மணிக்கு திறக்கப்படுகிறது என்று செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து செயல் அதிகாரி தர்மா அதிகாரிகளுடன் திருமலை அன்னமய்யா பவனில் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்குப்பிறகு நிருபர்களிடம் செயல் அதிகாரி தர்மா கூறியதாவது: ஏழுமலையான் கோயிலில் இந்த மாதம் 23ம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும்.

அன்று முதல் ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில் இலவச தரிசன டிக்கெட் இந்த மாதம் 22ம் தேதி மதியம் 2 மணி முதல் திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ள 9 மையங்களில் 90 கவுன்டர்கள் மூலம் 10 நாட்களுக்கு மொத்தம் 4,23,500 சர்வர்தர்ஷன் இலவச டோக்கன்கள் வழங்கப்படும்.

குளிர்காலம் என்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்க வேண்டும். முன்கூட்டிேய 22ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரையிலான டிக்கெட் தொடர்ந்து 10 நாட்களுக்கு உண்டானவை வழங்கப்படும். இருப்பினும் பக்தர்கள் தாங்கள் பெற்ற இலவச டிக்கெட்களில் உள்ள தேதிக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக மட்டுமே திருமலைக்கு வர வேண்டும். எந்தவித டிக்கெட் இல்லாமல் வந்தால் சுவாமி, தரிசனம் அறைகள் வழங்கப்படாது. அவ்வாறு வரும் பக்தர்கள் மொட்டையடித்து கொண்டும், வராக சுவாமி மற்றும் இதர சன்னதிகளுக்கு சென்று வழிபாடு செய்யலாம். ஏழுமலையான் கோயில் வெளியே இருந்து வழிபடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஏழுமலையான் கோயிலில் வரும் 23ம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: