ஈரோடு தாலுகா ஆபீஸ் வளாகத்தில் கண்களில் கருப்புத்துணி கட்டி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, டிச.13: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வ.பன்னீர்செல்வம், நிர்வாகிகள் ஜெயராமன், மணிபாரதி, ஹரிதாஸ் உள்ளிடோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும்.

70 வயது முடிவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட குறைபாடுகளை விரைவில் களைந்து, காசில்லா மருத்துவ பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் உள்ளிட்ட அனைத்து பகுதி ஓய்வூதியர்களுக்கும் அடிப்படை ஓய்வூதியமாக ரூ.7,859 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து அரசு துறைகளை சேர்ந்த ஓய்வூதியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

The post ஈரோடு தாலுகா ஆபீஸ் வளாகத்தில் கண்களில் கருப்புத்துணி கட்டி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: