பழநி, டிச. 11: வெண்டைக்காயில் காய்ப்புழு நோய் தாக்குதல் ஏற்பட்டால், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் தொப்பம்பட்டி அருகே உள்ள அக்கமநாயக்கன்புதூர், கரடிகூட்டம், காவலப்பட்டி, கணக்கன்பட்டி, பாப்பம்பட்டி, சத்திரப்பட்டி, போதுப்பட்டி, தாசிரிபட்டி, அமரபூண்டி உள்ளிட்ட கிராமங்களில் கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
தற்போது வெண்டைக்காய் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. இக்காய்களில் தற்போது காய்ப்புழுத் தாக்குதல் ஏற்பட்டு, செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நோய் தாக்குதலை தடுப்பது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: காய்ப்புழுத் தாக்குதல் ஆரம்ப கட்டமாக இருந்தால் என்டோசல்பான் அல்லது குளோரி பைரிபாஸ் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவிலும், தாக்குதல் அதிகளவு இருந்தால் டிசைடர் மருந்து 1 லிட்டருக்கு 1 மில்லி கலந்து இரண்டு மூன்று நாட்களுக்கு தெளிக்க வேண்டும்.
தாக்குதல் புழுவின் பரிணாமம் முட்டை, புழு என பல்வேறு கட்டங்களாக இருப்பதால் லார்வின் மருந்தை 10 லிட்டர் நீருக்கு 20 கிராம் கலந்து தெளித்து வந்தால் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். இவ்வாறு தெரிவித்தனர்.
The post வெண்டையில் காய்ப்புழு நோய் தாக்குதல் தடுக்க வேளாண்துறையினர் ஆலோசனை appeared first on Dinakaran.