சென்னை: சென்னையில் டிச.6ம் தேதி முதல் நேற்று வரை 5 நாளில் 28,563 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டன. சென்னையில் கடந்த 4ம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயலையொட்டி நேற்று வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்ட 1,34,687 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மழைநீர் பாதிக்கப்பட்ட இடங்களில் 49,15,571 பேருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்து விட்டதால் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் வீடு திரும்பினர். தற்போது வட சென்னையில் 7 இடங்களிலும், தென் சென்னையில் 12 இடங்களிலும் என 19 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த பணிகளும் இன்றுக்குள் முழுவதுமாக முடிவடைந்துவிடும். பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடிந்து விட்டதால் சென்னையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் 20,000க்கும் மேற்பட்ட சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக டிச.6ம் தேதியிலிருந்து நேற்று வரை 5 நாளில் சென்னையில் 28,563.27 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.இதில் மரம், இலை போன்ற தோட்ட குப்பைகள் 3449.39 மெட்ரிக் டன், வழக்கமான குப்பைகள் 25,113.8 மெட்ரிக் டன் அகற்றப்பட்டுள்ளது. மொத்தம் 1512 மரங்கள் விழுந்துள்ளது. அதில் 1360க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பல வீடுகளில் மழையால் வீணாக சென்ற தலைகாணி, பெட், ஷோபா, போன்ற பொருட்கள் அதிகளவில் குப்பைகளில் வீசப்படுகிறது. தூய்மை பணிகளை மேற்கொள்ள பல மாவட்டங்களில் இருந்து 2,336 தூய்மை பணியாளர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கு சென்னை மாநகராட்சி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் கடந்த 5 நாட்களில் 28,563 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் appeared first on Dinakaran.