பழநி குதிரையாறு அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: ஐ.பி.செந்தில் குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

பழநி, டிச. 8: பழநி அருகே குதிரையாறு அணையில் இருந்து விவசாய பாசனம், குடிநீருக்காக ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தண்ணீர் திறந்து வைத்தார். பழநி அருகே ஆண்டிபட்டி கிராமத்தில் குதிரையாறு அணை உள்ளது. கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து தற்போது அணையில் 71 அடி தண்ணீர் உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து விவசாய பாசனம், குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்க விவசாயிகளும், பொதுமக்களும் வலியுறுத்தினர்.

இதை ஏற்று குதிரையாறு அணையில் இருந்து விவசாய பாசனம், குடிநீர், தேவைக்கு டிச.7ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்டி நேற்று குதிரையாறு அணையில் இருந்து விவசாய பாசனம், குடிநீருக்காக ஐ.பி. செந்தில்குமார் எம்எல்ஏ தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து மொத்தம் 120 நாட்களுக்கு 10 கனஅடி நீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பழநி யூனியன் தலைவர் ஈஸ்வரி கருப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் சௌந்தரபாண்டியன், சுவாமிநாதன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் உதயகுமார் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். குதிரையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். மேலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தியடையும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post பழநி குதிரையாறு அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: ஐ.பி.செந்தில் குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: