காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மழை பாதிப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு

காஞ்சிபுரம், டிச.2: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழையால் ஏற்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. ெசன்னை தலைமை செயலகத்தில் நேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள், வங்ககடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 12 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், அனைத்து முதல்நிலை அலுவலர்களுடன் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதுகாப்புகளை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாக கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி, அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும். புயலின் சீற்றம் காரணமாக மரங்கள் விழும் என்ற காரணத்தால், புயலின்போது விழக்கூடிய மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு குழுக்கள் போதிய உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டல குழுக்களை முன்கூட்டியே நிலை நிறுத்த வேண்டும்.

கனமழையின்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கண்காணித்து விரைந்து சரிசெய்ய வேண்டும். மழைநீர் அதிகம் தேங்கிய பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்ற அதிகளவில் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி உடனடியாக அகற்ற வேண்டும். இந்த மழை காலத்தில் மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுவதை உறுதி செய்யபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நிவாரண முகாம்களுக்கு மையப்படுத்தப்பட்ட சமையல் அறையிலிருந்து உணவு தயாரிக்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்ப தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும், மின்சார வாரியம் 24 மணிநேரமும் புகார்களை கண்காணித்து உடனடியாக தீர்வுகாண வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் போலீஸ் எஸ்பி சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புயலை சமாளிக்க முன்னேற்பாடுகள் தீவிரம்
திருப்போரூர் பேரூராட்சியில் மிக்ஜம் புயலை சமாளிக்க முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று செயல் அலுவலர் ரவி தெரிவித்துள்ளார்.
திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல் அலுவலர் ரவி கூறுகையில், ‘பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் திருப்போரூரில் உள்ள செக்கடி தாங்கல், குயவன்தாங்கல், ஈச்சந்தாங்கல், கண்ணகப்பட்டு ஏரி, காலவாக்கம் ஏரி போன்றவை கண்காணிக்கப்படுகின்றன. ஏரிகளிலும், பாசன வாய்க்கால்களிலும் உடைப்பு ஏற்பட்டால் அவசர தேவைக்கு மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பேரூராட்சி ஊழியர்களுக்கு தேவையான டார்ச் லைட், முதலுதவி மருந்துகள் அடங்கிய பெட்டி, தார்ப்பாய்கள், ஹெல்மெட், நைலான் கயிறுகள், ஒளிரும் உடைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மழைக்கோட்டுகள், ஏணி, தண்ணீர் உறிஞ்சும் இயந்திரம், கையுறைகள் உள்ளிட்ட அனைத்தும் தேவையான அளவுக்கு வாங்கி ஊழியர்கள் உடனுக்குடன் பயன்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் செயல்படும் வகையில் தற்காலிக ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்’ என்றார்.

The post காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மழை பாதிப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: